Published : 07 Dec 2020 02:58 PM
Last Updated : 07 Dec 2020 02:58 PM
வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக உத்தரப்பிரதேசத்தின் கன்னுஜ் மாவட்டத்தில் டிராக்டர் பேரணி நடத்த முயன்ற சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை போலீஸார் இன்று கைது செய்தனர்.
அகிலேஷ் யாதவை கட்சி அலுவலகத்துக்குச் செல்லவிடாமல் போலீஸார் தடுத்ததால், அவர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அகிலேஷ் யாதவை போலீஸார் கைது செய்தனர்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக உத்தரப்பிரதேசம் கன்னோஜ் மாவட்டத்தில் டிராக்டர் பேரணி நடத்த சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், அகிலேஷ் யாதவ் பேரணிக்கு கன்னோஜ் மாவட்ட ஆட்சியர் அனுமதியளிக்க வில்லை. மேலும், நாளை விவசாயிகள் சார்பில் நடத்தப்படும் பாரத்பந்த்துக்கு ஆதரவாக தாதியா முதல் திர்வாரா வரை நடைபேரணியும் நடத்த அகிேலஷ் யாதவ் திட்டமிட்டு இருந்தார்.
இந்த டிராக்டர் பேரணிக்காக லக்னோவில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வீட்டிலிருந்து அகிலேஷ் யாதவ் புறப்பட்டார். ஆனால், விக்ரமாதித்யா சாலையிலேயே தடுப்புகளை ஏற்படுத்தி அகிலேஷ் யாதவை கட்சி அலுவலகத்துக்குச் செல்லவிடாமல் தடுத்தனர்.
இதனால், அகிலேஷ் யாதவுக்கும், போலீஸாருக்கும் சிறிதுநேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தன்னை பேரணிக்கு அனுமதிக்காத போலீஸாரைக் கண்டித்து சாலையில் அமர்ந்து அகிலேஷ் யாதவ் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் போலீஸாருக்கும், சமாஜ்வாதிக் கட்சித் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அங்கு நிலைமை மோசமாகும் சூழல் ஏற்பட்டதையடுத்து, அகிலேஷ் யாதவை கைது செய்து போலஸீார் அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து கவுதமபள்ளி போலீஸ்நிலைய அதிகாரி சந்திரசேகர் சிங் கூறுகையில் “ சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கன்னோஜ் செல்ல முயன்றார். ஆனால், கன்னோஜ் மாவட்ட ஆட்சியர் பேரணிக்கு அனுமதியளிக்கவில்லை. இதனால் விக்ரமாத்தியா சாலையிலேயே தடுப்புகளை ஏற்படுத்தி அவரை மறித்து கைது செய்தோம்” எனத் தெரிவித்தார்.
சமாஜ்வாதிக் கட்சியின் தேசியச் செய்திததொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி கூறுகையில் “ மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு ஜனநாயகத்துக்கு விரோதமான செயலில் ஈடுபடுகிறது. அகிலேஷ் யாதவைப் பார்த்து அரசு அச்சப்படுகிறது. அவர் விவசாயிகள் பேரணியில் ஜனநாயக முறைப்படி, அமைதியாகவே பங்கேற்க இருக்கிறார். ஆனால், அதற்கு மாநில அரசு அனுமதி மறுக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சமாஜ்வாதிக் கட்சித் தொண்டர்களை இந்தப் பேரணியில் பங்கேற்கவரவிடாமல் போலீஸார் தடுத்துள்ளனர்.” எனத் தெரிவித்தார்.
சமாஜ்வாதிக் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் “ வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு அநீதிஇழைக்கப்பட்டுள்ள அநீதியை எதிர்த்தும் அகிலேஷ் யாதவ் நடத்தும் விவசாயிகள் பேரணியைப் பாரத்்து பாஜக அரசு அச்சப்படுகிறது.
பேரணியை தடுத்து, சமாஜ்வாதிக் தொண்டர்களுக்கு எதிராக அராஜகம் செய்கிறது. சமாஜ்வாதிக் கட்சியின் தொண்டர்களை வீ்்ட்டிலிருந்து வெளியே வரவிடாமல் போலீஸார் தடுக்கிறார்கள். இது கடுமையாகக் கண்டிக்கத் தக்கது. இளைஞர்களும், விவசாயிகளும் அரசுக்கு நிச்சயம் பதில் அளிப்பார்கள் ” எனத் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT