Published : 07 Dec 2020 01:19 PM
Last Updated : 07 Dec 2020 01:19 PM
டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான மத்திய அரசின் மத்திய விஸ்டா திட்டத்துக்கு எந்தவிதமான தடையும் இல்லை. வரும் 10-ம் தேதி புதிய நாடாளுமன்றத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை நடத்தலாம் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று அனுமதியளித்தது.
மத்திய விஸ்டா திட்டத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான முடிவை எடுக்கும் வரை, எந்தவிதமான கட்டுமானத்தையும் இடிக்கமாட்டோம். கட்டுமானம் ஏதும் கட்டப்படாது என்று மத்திய அரசு உறுதியளித்தபின் இந்த அனுமதி அளிக்கப்பட்டது.
இப்போதைய நாடாளுமன்றம் 93 ஆண்டுகள் பழமையானது. இந்தியாவின் வரலாற்றுச் சின்னங்களில் நாடாளுமன்றமும் ஒன்றாகும். இந்தக் கட்டிடத்தை இடிக்காமல் அதனையொட்டி 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட உள்ளது. தரைத்தளம் மட்டும் 16,921 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கட்டப்பட உள்ளது.
இதற்காக சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், மத்திய தலைமைச் செயலகம் ஆகியவை கட்டப்பட உள்ளன.
இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் 900 முதல் 1200 எம்.பி.க்கள் வரை அமரலாம். புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்தின் மதிப்பு ரூ.971 கோடியாகும். 21 மாதங்களில் அதாவது 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75-வது சுதந்திர தினம் கொண்டாடுவதற்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முக்கோண வடிவத்தில் 42 மீட்டர் உயரம் கொண்ட புதிய கட்டிடத்தில் தரைத்தளம் மற்றும் 3 தளங்கள் கட்டப்படும்.
இந்தப் புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான பூமி பூஜை வரும் 10-ம் தேதி டெல்லியில் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடி பங்கேற்று புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டுகிறார்.
இந்நிலையில் மத்திய அரசின் விஸ்டா திட்டத்துக்கு எதிராகப் பல்வேறு கேள்விகளை எழுப்பி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. டெல்லியில் மிகப்பெரிய அளவில் கட்டப்படும் கட்டிடத்துக்கு எவ்வாறு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்தது என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு இருந்தன.
இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 5-ம் தேதி விசாரித்து எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் ஒத்திவைத்தது.
இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வில் காணொலி மூலம் இன்று மீண்டும் விசாரிக்கப்பட்டது. மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.
நீதிபதி கான்வில்கர் கூறுகையில், “புதிய நாடாளுமன்றத் திட்டத்துக்குத் தேவையான ஆவணப் பணிகளைத் தாராளமாக மேற்கொள்ளலாம். ஆனால், கட்டிடங்கள் எதையும் இடிக்கக்கூடாது, புதிதாகக் கட்டிடம் கட்டக்கூடாது. மரங்கள் எதையும் வெட்டக்கூடாது. இந்த மனுக்கள் மீதான தீர்வு எட்டப்படும்வரை இந்த நிலை தொடர வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
இந்தத் திட்டத்துக்கு நாங்கள் எந்தவிதமான தடையும் விதிக்கவில்லை என்பதற்காகக் கட்டுமானத்தைத் தொடங்கலாம் என்பதல்ல. நாங்கள் இதுவரை எந்தவிதமான புதிய தடை உத்தரவும் விதிக்கவில்லை” எனத் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இந்த விவகாரத்தில் பதில் அளிக்க சிறிது அவகாசம் தேவை” எனக் கேட்டுக்கொண்டார்.
அப்போது நீதிபதி கான்வில்கர், “இந்தக் கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமானப் பணியைத் தொடங்குவது குறித்து மத்திய அரசின் கருத்து என்ன என்பதை 5 நிமிடங்களில் கூறுங்கள். அதன்பின் உத்தரவு பிறப்பிக்கிறோம்’’ என்று தெரிவித்தார்.
அதன்பின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், “மத்திய விஸ்டா திட்டத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது தீர்வு எட்டப்படும் வரை புதிய நாடாளுமன்றத்துக்காக எந்தக் கட்டிடமும் இடிக்கப்படாது. புதிதாக எந்தக் கட்டுமானமும் கட்டப்படாது. மரங்கள் வெட்டப்படாது என மத்திய அரசு உறுதியளிக்கிறது” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, நீதிபதி கான்வில்கர் பிறப்பித்த உத்தரவில், “வரும் 10-ம்தேதி மத்திய அரசு புதிய நாடாளுமன்றத்துக்கான கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை நடத்திக்கொள்ள எந்தவிதமான தடையும் இல்லை. ஆனால், மனுக்கள் மீது தீர்வு எட்டப்படும்வரை கட்டுமானங்கள் இடிக்கப்படக்கூடாது. புதிதாகக் கட்டுமானம் கட்டப்படக்கூடாது” என உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT