Published : 04 Oct 2015 12:06 PM
Last Updated : 04 Oct 2015 12:06 PM
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, புதிய தலைநகர் அமையும் பகுதியில் கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடவுள்களுக்கு கோயில் கட்டி நமது கலாச்சாரத்தை வெளிப்படுத்தினர் அரசர்கள். இதைத் தொடர்ந்து சிலர் தங்களது தாய், தந்தையருக்கும் கோயில் கட்டி தங்களது பாசத்தை வெளிப்படுத்தினர். மேலும் சிலர் தங்களது அபிமான நடிகை, நடிகர்களுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் கூட நடத்தினர். தற்போது ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கோயில் கட்ட முடிவு செய்துள்ளனர் விவசாயிகள்.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தனியாக பிரிந்த ஆந்திராவுக்கு நிரந்தர தலைநகரம் அமைக்க குண்டூர்-விஜயவாடா இடையே 29 கிராமங்களை உள்ளடக்கிய அமராவதியை தேர்வு செய்தனர். தலைநகர் திட்டத்தை சிங்கப்பூர் நிபுணர்கள் தயாரித்துள்ளனர். இதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, சிங்கப்பூர் பிரதமர் மற்றும் மத்திய மாநில அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், ஆளுநர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், தலைநகரம் அமைய உள்ள குண்டூர் மாவட்டம், தூளூரு பகுதியில் உள்ள உத்தண்ட ராயனி பாளைய கிராமத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு கோயில் கட்ட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். தங்களது பகுதியில் தலைநகரை உலகத் தரத்தில் கட்ட முடிவெடுத்ததற்கு நன்றி செலுத்தும் வகையில், முதல்வருக்கு கோயில் கட்ட முடிவு செய்ததாக, தலைநகருக்காக நிலம் வழங்கிய தூளூர் பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான அடிக்கல் நாட்டும் விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவில் மாநில அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், அமைச்சர்கள், அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT