Published : 07 Dec 2020 03:14 AM
Last Updated : 07 Dec 2020 03:14 AM
அருணாச்சலப் பிரதேச எல்லைப் பகுதியில் 3 கிராமங்களை சீனா புதிதாக உருவாக்கி உள்ளது. இதன்மூலம் இந்திய பகுதிக்குள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா - சீனா - பூடான் ஆகிய நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இடம் அருணாச்சலப் பிரதேச மாநில எல்லையில் பம் லா என்றழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் சீனா புதிதாக 3 கிராமங்களை உருவாக்கி உள்ளது. இந்தியாவுடன் தொடர்ந்து எல்லைப் பிரச்சினையில் ஈடுபடும் சீனா, அருணாச்சலின் பகுதிகளை ஆக்கிரமிக்க புதிய கிராமங்கள் உருவாக்கி அதன் மூலம் எல்லையை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது என்று சீனாவின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்து வரும் டாக்டர் பிரம்மா செலானி கூறுகிறார்.
அவர் மேலும் கூறியதாவது:
அருணாச்சல் மாநிலத்தை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அந்த கருத்தை பலப்படுத்திக் கொள்ள அருணாச்சலின் எல்லைப் பகுதிகளில் ஹான் இன சீனர்களை, திபெத் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களையும் குடியேற்ற சீனா திட்டமிட்டுள்ளது. அதற்காக அருணாச்சல் - திபெத் - பூடான் இணையும் பகுதியில் இருந்து சில கி.மீ. தொலைவில் 3 புதிய கிராமங்களை சீனா உருவாக்கி உள்ளது.
தென் சீன கடல் பகுதிக்கு சொந்தம் கொண்டாடி வரும் சீனா, அங்கு சீன மீனவர்களை முதலில் அதிகமாக பயன்படுத்தியது. அதேபோல் இமயமலை பகுதிகளை ஆக்கிரமிக்க, தற்போது கால்நடை மேய்ப்பவர்கள், பொதுமக்களை சீனா பயன்படுத்தி வருகிறது. இவ்வாறு டாக்டர் பிரம்மா கூறினார்.
செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அருணாச்சல் எல்லையில் சீனா கிராமங்களை உருவாக்கி இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த இடம் கடந்த 2017-ம் ஆண்டு டோக்லாம் எல்லைப் பகுதியில் இந்திய வீரர்களுடன் சீன வீரர்கள் தள்ளுமுள்ளுவில் ஏற்பட்ட இடத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில்தான் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT