Published : 06 Dec 2020 08:44 PM
Last Updated : 06 Dec 2020 08:44 PM
யமுனை ஆற்றில் மாசு மற்றும் நுரை அதிகரித்துள்ளது பற்றி கவலை தெரிவித்துள்ள மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம், கழிவுநீர் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்கும்படி டெல்லி மற்றும் இதர மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
யமுனை ஆற்றில் நீரின் தரத்தையும், ஆற்றில் வெளியேற்றப்படும் நீரை வடிக்கும் பணிகளை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்காணிக்கிறது.
சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் யமுனை ஆற்றில் திறந்து விடப்படுவது, தற்போது உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படாமல் இருப்பது, யமுனை ஆற்றங்கரையில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவுநீர் சுத்திகரிப்புநிலையங்கள் முறையாக செயல்படாமல் இருப்பது போன்றவற்றால் ஆற்றில் நுரை ஏற்படுவதையும், அம்மோனியா அளவு அதிகரிப்பதையும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் இதற்கு முன்பே கண்டுள்ளது.
யமுனை ஆற்றில் உள்ள 22 வடிகால்களை, சமீபத்தில் கண்காணித்ததில், சோனியா விஹார், சாஸ்திரி பார்க் உட்பட 14 வடிகால்கள் பயன்படுத்தப்படாமல் கழிவு நீர் திறந்து விடப்படுகிறது. பல வடிகால்கள் முறையாக செயல்படவில்லை. தொழிற்சாலைகளின் கழிவு நீர் முறையாக சுத்திகரிக்கப்படாமல் யமுனை ஆற்றில் கலப்பதால், பாஸ்பரஸ் அளவு பல மடங்கு அதிகரித்து நுரை ஏற்படுவது கண்டறியப்பட்டது.
இதையடுத்து டெல்லி குடிநீர் வாரியத்துக்கு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவில், சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் எதுவும் வடிகால்களில் திறந்து விடாமல் இருப்பதையும், கழிவு நீர் சுத்திகரிப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றுவதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுத்து டிசம்பர் 15ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி கூறியுள்ளது.
கழிவு நீரை சுத்திகரிக்காத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தில்லி மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோன்ற உத்தரவுகள் ஹரியாணா, உத்தரப் பிரதேச மாநிலங்களின் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT