Published : 06 Dec 2020 09:53 AM
Last Updated : 06 Dec 2020 09:53 AM
பாஜகவுடன் நான் கூட்டணி வைத்திருந்தால் இன்னும் நான் முதல்வராக இருந்திருப்பேன். காங்கிரஸூடன் கூட்டணி வைத்து 12 ஆண்டுகளாக நான் காப்பாற்றிய என் நல்ல பெயரைக் கெடுத்துக் கொண்டேன் என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான ஹெச்டி குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சி்க்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தேர்தலில் எதிர்துருவங்களாகப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் கூட்டணி சேர்ந்து ஆட்சியில் அமர்ந்தன. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஹெச்டி குமாரசாமி முதல்வராக கடந்த 2018 மே 23 முதல் 2019 ஜூலை 23ம் தேதிவரை இருந்தார்.
அதன்பின் கூட்டணிக்குள் ஏற்பட்ட குழப்பம், எம்எல்ஏக்கள் விலகல் போன்றவற்றால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆட்சி கவிழ்ந்தது.
இந்த கூட்டணி ஆட்சி முறிவுக்குப்பின்பும் குமாரசாமிக்கும், முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்தத் தலைவர் சித்தராமையாவுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இரு தலைவர்களும் வார்த்தைகளால் கடுமையாக விமர்சித்துக் கொள்கின்றனர்.
இந்நிலையில் பெங்களூருவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
நாங்கள் காங்கிரஸ் கட்சியின் சதி வலையில் வீழ்ந்துவிட்டோம். சித்தராமையா எனக்கும், எங்கள் கட்சிக்கும் துரோகம் செய்துவிட்டார். சித்தராமையா தொடர்ந்து எங்கள் மீது குற்றச்சாட்டு கூறிவந்ததே, எங்கள் ஆட்சி கவிழக் காரணமாக அமைந்தது
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி குறித்து சித்தராமையா தொடர்ந்து பேசுவது தார்மீக ரீதியில் சரியானது அல்ல. எங்களைப் பற்றி சிந்திப்பதற்கு பதிலாக, தங்கள் கட்சி குறித்து பேச வேண்டும். என்னை பலமுறை அசிங்கப்படுத்த சித்தராமையாக முயன்றுள்ளார்.
கடந்த 2006-07ல் நான் முதல்வராக இருந்தபோது, மக்களிடம் நல்லபெயரை ஈட்டியிருந்தேன். கடந்த 12 ஆண்டுகளான் சம்பாதித்த நல்லபெயரை காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து கெடுத்துக் கொண்டேன்.
பாஜகவுடன் நாங்கள் நல்ல உறவு வைத்திருந்தால், இந்நேரம் வரை நான்தான் மாநிலத்தில் முதல்வராக இருந்திருப்பேன். 2018-ல் காங்கிரஸ் கட்சி எங்களை வேதனைப்படுத்தியதை ஒப்பிடும்போது, கடந்த 20008ல் பாஜக எங்களைக் காயப்படுத்தியது குறைவுதான்.
என் தந்தையும், கட்சியின் தலைவருமான தேவகவுடாவின் அறிவுரையால்தான் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தோம். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கக் கூடாது. எங்களை பாஜகவின் பி டீம் என்று விமர்சித்தவர்களுடனே கூட்டணி வைத்தோம்.
இப்போது எங்கள் கட்சி பல்வேறு பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது, பலவீனங்களைச் சந்தித்துள்ளோம். கடந்த 3 தேர்தலில் 30 முதல் 40 இடங்களை தனித்து வென்ற எங்கள் கட்சி தற்போது பலவீனமாக இருக்கிறது. எங்கள் கட்சி பலவீனமடையவும், என்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படவும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்ததுதான் காரணம்.
இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார்.
சித்தராமையா பதில்
குமாரசாமியின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா பதில் அளித்து பெலகாவியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “ அரசியல் லாபத்துக்காக எப்போதும் குமாரசாமி பொய்களைப் பேசுவார். அவரின் வார்த்தையில் உண்மை இருக்காது. கண்ணீர் என்பது குமாரசாமி குடும்பத்தாரின் மிகப்பெரிய ஆயுதம். அவர்களின் கட்சி் 37 இடங்களில் வென்றது, காங்கிரஸ் 80 இடங்களில் வென்றது. இருந்தும் அவரைத்தான் எங்கள் கட்சி முதல்வராக்கியது. குமாரசாமிக்கு எப்போதும் நல்ல எண்ணம் கிடையாது” எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் மழுப்பல்
காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் சதீஸ் ஜர்கிகோலி கூறுகையில் “ இப்போது மாநிலத்தில் ஜேடியு, காங்கிரஸ் கட்சி இடையே எந்த கூட்டணியும் இல்லை. கதை முடிந்துவிட்டது, இருவரும் தனித்தனிக் கட்சிகள். இப்போது எங்கள் கட்சியைப் பலப்படுத்த விரும்புகிறோம். ஜேடியு கட்சியின் கருத்துக்கு பதில் அளிக்க விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.
இனிமேல் உணர்வார்- பாஜக
பாஜக பொதுச்செயலாளர் சிடி ரவி கூறுகையில் “ பெரிய சேதங்கள் ஏற்பட்டபின்புதான் குமாரசாமி பாடம் கற்றுக்கொண்டுள்ளார். காங்கிரஸுக்கு எதிரான சித்தாந்தத்தை குமாரசாமி கடைபிடித்திருக்க வேண்டும். ஆனால், கையைச் சுட்டுக்கொண்டபின் காங்கிரஸுக்கு எதிராக குமாரசாமி பேசுகிறார். இனிமேல் காங்கிரஸுடன் கூட்டணி வைக்கமாட்டார்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT