Published : 06 Dec 2020 03:16 AM
Last Updated : 06 Dec 2020 03:16 AM

மாநகராட்சி தேர்தலில் டிஆர்எஸ் முக்கிய பிரமுகர்கள் பலர் தோல்வி; ஹைதராபாத்தில் வலுவான கட்சியாக உருவெடுத்த பாஜக: முதல்வர் சந்திரசேகர ராவின் கணக்கு தவிடுபொடி

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜக முதல் முறையாக அதிக இடங்களில் வென்றது. ஹைதராபாத்தில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில், தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பெண் உறுப்பினர்கள் வெற்றிச் சின்னத்தைக் காட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.படம்: நகர கோபால்

ஹைதராபாத்

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் ஆளும் டிஆர்எஸ் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் தோல்வி அடைந்தனர். அதேநேரம் பாஜக வலுவான கட்சியாக உருவெடுத்துள்ளது.

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பல்வேறு மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள், எம்பிக்கள் என பலர் ஈடுபட்டனர். இந்த தேர்தல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும் ஹைதராபாத் மக்களவை தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைஸியின் பேச்சுக்கு சவால் விடும் வகையில் பாஜகவினர் வரிசை கட்டி ஓவைஸியின் கோட்டையிலேயே அனல் பறக் கும் பிரச்சாரம் செய்தனர். இதன் பலனாக ஹைதராபாத்தில் பாஜக வின் ஓட்டு வங்கி பன்மடங்கு பெருகியுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு நடந்த மாநகராட்சி தேர்தலில் தெலுங்குதேசம் கட்சியுன் கூட்டணி வைத்து போட்டியிட்ட பாஜக வெறும் 4 இடங்களில்மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால், இம்முறை தனித்து போட்டியிட்டு 48 இடங்களில் வெற்றிக்கனியைப் பறித்து 2-ம் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

மொத்தம் உள்ள 150 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலில்அனைத்து இடங்களிலும் டிஆர்எஸ் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியது. பாஜக 149, காங்கிரஸ் 146, தெலுங்கு தேசம் 106, ஏஐஎம்ஐஎம் கட்சி 51 இடங்களிலும் தங்களது வேட்பாளர்களை நிறுத்தின.149 வார்டுகளுக்கு மட்டுமேதேர்தல்முடிவுகள் அறிவிக்கப்பட்டதில், ஆளும் டிஆர்எஸ் கட்சி, வெறும் 55 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது. கடந்த முறை இக்கட்சி 99 வார்டுகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மேயர் பதவியைப் பிடித்தது. ஆளும் கட்சிக்கு இந்த தேர்தலில் 35.81 சதவீத வாக்குகள் பதிவானது. பாஜகவுக்கு 35.56 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. பலவார்டுகளில் 500-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே இந்த இரு கட்சிகளும் வெற்றி, தோல்விகளை சந்தித்தன. ஆக, இந்த மாநகராட்சி தேர்தல் மூலம் பாஜக தெலங்கானாவில் காலூன்ற தொடங்கிவிட்டது.

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் டிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த பல பிரமுகர்கள் தோல்வி அடைந்துள்ளனர். குறிப்பாக உப்பல் தொகுதி எம்.எல்.ஏ. பூஷண் ரெட்டியின் மனைவி ஸ்வப்ணா, கண்டோண்மெண்ட்எம்.எல்.ஏ. சாயண்ணா மகள் லாஸ்யா நந்திதா, முஷீராபாத் எம்.எல்.ஏ. கோபாலின் மைத்துனி பத்மா நரேஷ், மறைந்த முன்னாள் அமைச்சர் நாயனி நரசிம்மா ரெட்டியின் மருமகன் நிவாசரெட்டி, ராஜேந்திர நகர் எம்.எல்.ஏ. பிரகாஷ் கவுடுவின் தம்பி பிரேம்தாஸ் கவுடு, குத்புல்லாபூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சைலம் கவுடுவின் தம்பி நிவாச கவுடு ஆகியோர் படுதோல்வி அடைந்துள்ளனர்.

கடந்த முறை வெற்றி பெற்று, இம்முறை போட்டியிட்ட ஆளும் கட்சியைச் சேர்ந்த 35 பேர் தோல்வி அடைந்துள்ளனர். ஆட்சி பலம் இருப்பதாலும், பிரமுகர்களின் உறவினர்கள் என்பதாலும் சுலபமாக வெற்றி பெற்று விடலாம் என்ற முதல்வர் சந்திரசேகர ராவின் கணக்கு தவிடு பொடியாகி உள்ளது.

மாநில காங். தலைவர் ராஜினாமா

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ்கட்சி வெறும் 2 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது. பல வார்டுகளில் டெபாசிட் இழந்தது. சில நாட்களுக்கு முன்பு தெலங்கானாவின் துப்பாக்கா சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ் வேட்பாளர் டெபாசிட் இழந்தார். இத் தோல்விகளுக்கு தார்மீக பொறுப்பேற்று மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் உத்தம் குமார் ரெட்டி நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x