Published : 05 Dec 2020 02:05 PM
Last Updated : 05 Dec 2020 02:05 PM
ஆன்லைன் விளையாட்டுகள், ஃபாண்டஸி விளையாட்டுகள் உள்ளிட்டவற்றின் விளம்பரங்கள் குறித்த அறிவுறுத்தல் வழங்க்பட்டுள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், ஆன்லைன் விளையாட்டுகள், ஃபாண்டஸி விளையாட்டுகள் உள்ளிட்டவற்றின் விளம்பரங்கள் குறித்த அறிவுறுத்தலை அனைத்து தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளுக்கும் வழங்கியுள்ளது.
இது குறித்து தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில், ஆன்லைன் விளையாட்டுகள், ஃபாண்டஸி விளையாட்டுகள் உள்ளிட்டவற்றின் விளம்பரங்கள் அதிகளவில் தொலைக்காட்சிகளில் வருவதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கவனத்துக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இத்தகைய விளம்பரங்கள் பார்வையாளர்களை தவறாக வழிநடத்துபவையாக இருப்பதாகவும், அவ்விளையாட்டுகளில் உள்ள நிதி மற்றும் இதர அபாயங்களைக் குறித்த சரியான தகவல்களை தெரிவிப்பதில்லை என்றும் கவலைகள் தெரிவிக்கப்பட்டன என்று அமைச்சகம் கூறியுள்ளது. மேலும், கேபிள் தொலைக்காட்சிகள் (ஒழுங்குமுறை) சட்டம், 1995 மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019 ஆகியவற்றின் கீழ் வகுக்கப்பட்டுள்ள விளம்பர விதியையும் இந்த விளம்பரங்கள் முறையாக பின்பற்றுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் மின்னணு & தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம் ஆகியவற்றோடு இணைந்து, பங்குதாரர்களின் ஆலோசனைக் கூட்டமொன்றை 2020 நவம்பர் 18 அன்று தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் நடத்தியது.
இந்திய விளம்பர தரநிர்ணயக் குழு, செய்தி ஒலிபரப்பாளர்கள் சங்கம், இந்திய ஒலிபரப்பு கூட்டமைப்பு, அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு, இந்திய ஃபாண்டஸி விளையாட்டு கூட்டமைப்பு மற்றும் ஆன்லைன் ரம்மி கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஆலோசனையைத் தொடர்ந்து, விளம்பரங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் நுகர்வோர் நலன் ஆகியவற்றை உறுதி செய்வதற்கும், விளம்பரதாரர்கள் மற்றும் ஒலிபரப்பாளர்கள் ஆகியோரின் நலனைக் கருதியும், முறையான வழிகாட்டுதல்களை இந்திய விளம்பர தரநிர்ணயக் குழு வெளியிடும் என முடிவெடுக்கப்பட்டது.
2020 நவம்பர் 24 தேதியிட்ட செய்திக் குறிப்பு ஒன்றில், இது தொடர்பான வழிகாட்டுதல்களை இந்திய விளம்பர தரநிர்ணயக் குழு வெளியிட்டுள்ளது. 2020 டிசம்பர் 15 முதல் இவை நடைமுறைக்கு வரும். வழிகாட்டுதல்களில்ன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
* 18 வயதுக்கு குறைவானவரோ, 18 வயதுக்கு குறைவாக தோற்றமளிப்பவரோ, ஆன்லைன் விளையாட்டுகளில் பணம் வெல்வதாகவோ, இத்தகைய விளையாட்டுகளை விளையாடலாம் என்றோ எந்த விளையாட்டு விளம்பரமும் காட்டக்கூடாது.
* அச்சு மற்றும் நிலையான விளம்பரங்களில், இந்த விளையாட்டுகளில் உள்ள நிதி அபாயங்கள் குறித்த அறிவிப்பை விளம்பரத்தின் 20 சதவீத இடத்துக்குக் குறையாமல் வெளியிட வேண்டும்.
* இந்திய விளம்பர தரநிர்ணயக் குழுவின் விதிகளை விளம்பரங்கள் பின்பற்ற வேண்டும்.
* “இந்த விளையாட்டில் நிதி அபாயம் உள்ளது மற்றும் இது அடிமையாக்கக்கூடியது” என்னும் வாசகம் ஒலி/ஒளி விளம்பரத்தில் இடம்பெற வேண்டும். விளம்பரம் எந்த மொழியில் உள்ளதோ, அந்த மொழியிலேயே இந்த எச்சரிக்கை வாசகமும் இடம்பெற வேண்டும்.
* இதன் மூலம் உண்மையான பணத்தை வெல்லலாம் என்றோ, இது ஒரு வருவாய் வாய்ப்பென்றோ, மாற்று வேலைவாய்ப்பென்றோ, இதை விளையாடுபவர் மற்றவர்களை விட வெற்றியாளர் என்ற தொனியிலோ விளம்பரங்கள் இருக்கக்கூடாது.
இந்த விதிகளை அனைத்து ஒலிபரப்பு/ஒளிபரப்பு நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT