Published : 05 Dec 2020 12:42 PM
Last Updated : 05 Dec 2020 12:42 PM
விவசாயிகளின் எம்எஸ்பி மீதான கோரிக்கையை நிறைவேற்றா விட்டால் பாஜக ஆதரவை வாபஸ் பெறுவதாக ஜேஜேபி கட்சி மிரட்டல் விடுத்துள்ளது.
ஹரியாணாவில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) உறுப்பினராக இருப்பது ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி). இதன் தலைவரான துஷ்யந்த் சவுதாலா அம்மாநிலத்தின் துணை முதல்வராக உள்ளார்.
விவசாயிகள் போராட்டத்தில் ஹரியாணாவின் ஜாட் சமூகத்தினர் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். ஜேஜேபி, ஜாட் சமூகத்தினருக்கான கட்சி என்பதால், அவர்களது குறைந்தபட்ச நிர்ணய விலை (எம்எஸ்பி) மீதானக் கோரிக்கையில் ஆதரவளித்துள்ளது.
இதுகுறித்து ஜேஜேபியின் செய்தித்தொடர்பார் கூறும்போது, ‘‘விவசாயிகளின் எம்எஸ்பி மீதானக் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றா விட்டால் துணை முதல்வர் பதவியை துஷ்யந்த் ராஜினாமா செய்வார்.
இப்பிரச்சனையை உடனடியாகப் பேசித் தீர்க்கும்படி மத்திய அரசை எங்கள் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. எனவே, விரைவில் போராட்டம் முடிவிற்கு வரும்’’ எனத் தெரிவித்தார்.
இதற்கு முன்பு என்டிஏவின் உறுப்பினரான ராஷ்டிரிய லோக்தாந்திரிக் கட்சியும் விவசாயிகளுக்கு ஆதரவளித்திருந்தது. இவர்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை எனக் கூறி அதன் கட்சி தலைவரும் எம்.பியுமான ஹனுமன் பேனிவால் கூட்டணியில் இருந்து வெளியேறினார்.
இதனால், பாஜக அரசிற்கு ஆதரவளித்து வரும் ஹரியாணா எம்எல்ஏக்களுக்கும் இப்பிரச்சனையில் அழுத்தம் அதிகரித்துள்ளது. இதில், சிறிய கட்சி மற்றும் சுயேச்சைகளும் இடம் பெற்றுள்ளதால், பாஜக ஆட்சிக்கு சிக்கல் உருவாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT