Published : 04 Dec 2020 02:41 PM
Last Updated : 04 Dec 2020 02:41 PM
நாட்டில் உள்ள தனியார் மற்றும் அரசுத்துறையில் உள்ள ஒரு கோடி மருத்துவப் பணியாளர்கள், 2 கோடி முன்களப் பணியாளர்களுக்கு முதலில் கரோனா வைரஸ் தடுப்பு மருந்து வழங்கப்படும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தொகுத்து வழங்கினார்.
நாட்டில் கரோனா வைரஸ் பரவல் சூழல், கரோனா வைரஸ் தடுப்பூசியை எவ்வாறு மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் காணொலி மூலம் நடக்கும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸவர்த்தன், அமைச்சர்கள் முரளிதரன், அர்ஜுன் ராம் மேக்வால், பிரஹலாத் ஜோஷி, அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கவுபா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத், திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் சுதிப் பந்தோபத்யாயே, தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் சரத் பவார், டிஆர்எஸ் கட்சி சார்பில் நாம நாகேஸ்வர ராவ், சிவசேனா சார்பில் வினாயக் ராவத் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகையில், “கரோனா வைரஸ் தடுப்பூசிக்கு என்ன விலை நிர்ணயிக்கலாம் என்பது குறித்து மத்திய அரசு, மாநிலங்களுடன் பேசி வருகிறது. மக்களின் உடல்நலனுக்கு அதிகமான முக்கியத்துவம் அளித்து நல்ல முடிவு எடுக்கப்படும்.
கரோனா தடுப்பு மருந்துகளைப் பகிர்ந்தளிப்பதில் மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன. தடுப்பு மருந்துகளைப் பகிர்ந்தளிப்பதில் இந்தியா நிபுணத்துவம் பெற்றுள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது சிறப்பாகப் பகிர்ந்தளிக்கத் தகுதியும் இருக்கிறது.
தடுப்பு மருந்துகளைப் பகிர்ந்தளிக்கும் பிரிவில் இந்தியாவுக்கு அனுபவமான நெட்வொர்க் இருக்கிறது. இதை நாம் முழுமையாகப் பயன்படுத்துவோம்.
அடுத்த சில வாரங்களில் கரோனா தடுப்பு மருந்து தயாராகிவிடும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். மருத்துவ விஞ்ஞானிகளின் அனுமதி கிடைத்தவுடன் இந்தியாவில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும். மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவப் பணியாளர்கள் ஒரு கோடி பேருக்கு முதலில் கரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும்.
அதன்பின் போலீஸார், ராணுவத்தினர், நகராட்சிப் பணியாளர்கள் உள்ளிட்ட 2 கோடி முன்களப் பணியாளர்கள், முதியோர், தீவிரமான நோயால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு கரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும்.
கரோனா வைரஸ் தடுப்பு மருந்தை வெற்றிகரமாகக் கண்டுபிடித்துவிடுவோம் என்று நமது விஞ்ஞானிகள் நம்பிக்கை கொள்கிறார்கள். நம்முடைய கரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானது, விலை மலிவானது என்பதால்தான் உலகம் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறது''.
இவ்வாறு பிரதமர் மோடி பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT