Published : 04 Dec 2020 12:48 PM
Last Updated : 04 Dec 2020 12:48 PM
வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சாகித்ய அகாடமி விருதுபெற்ற பஞ்சாப் எழுத்தாளர்கள் தங்கள் விருதுகளைத் திருப்பி அளித்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் மட்டுமின்றி பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் விவசாயிகள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாகவே இச்சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் ரயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
பஞ்சாப் விவசாயிகள் நவம்பர் 27 முதல் 'டெல்லி சலோ' போராட்டத்தைத் தொடங்கினர். 'டெல்லி சலோ' போராட்டம் நாளையோடு 10-வது நாளை நெருங்க உள்ள நிலையில், 8 திருத்தங்கள் செய்ய மத்திய அரசு முன்வந்தது. எனினும், சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும் என்று போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக் கோரி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் செய்து வருகின்றன.
நேற்று, பஞ்சாப் முன்னாள் முதல்வரும், அகாலி தளம் மூத்த தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் மத்திய அரசு வழங்கிய பத்ம விபூஷண் விருதைத் திருப்பி வழங்கினார்.
இந்திய அரசாங்கத்தால் விவசாயிகளுக்குத் துரோகம் இழைக்கப்பட்டுள்ளதை எதிர்த்தும், விவசாயிகள் மோசமாக அவமதிக்கப்பட்டுள்ளதற்கு எதிராகவும் பத்ம விபூஷண் விருதை திருப்பித் தந்ததாக பாதல் கூறினார்.
அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சுக்தேவ் சிங் திண்சாவும் தனக்கு வழங்கிய பத்ம பூஷண் விருதைத் திருப்பி வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
பாதலைத் தொடர்ந்து தற்போது பஞ்சாப்பின் மூத்த எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் தங்கள் விருதுகளைத் திருப்பி அளித்துள்ளனர்.
இதுகுறித்து மத்திய பஞ்சாப் எழுத்தாளர்கள் சங்கம் இன்று (வெள்ளிக்கிழமை) கூறியுள்ளதாவது:
''பஞ்சாப்பில் சாகித்ய அகாடமி விருதை வென்ற சிர்மோர் ஷைர் டாக்டர் மோகன்ஜித், பிரபல சிந்தனையாளர் டாக்டர் ஜஸ்விந்தர் சிங்,நாடக ஆசிரியர் திரிபூன் ஸ்வராஜ்பீர் உள்ளிட்டோர் விவசாயிகளுக்கு ஆதரவைத் தெரிவித்து தங்கள் விருதுகளை மத்திய அரசிடம் திருப்பி அளித்துள்ளனர்.
ஏற்கெனவே கருத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்டபோதும் இந்த அரசாங்கத்தின் அடக்குமுறை அணுகுமுறையை எதிர்த்து இதேபோல பஞ்சாப்பின் பல எழுத்தாளர்கள் தங்களின் அகாடமி விருதுகளைத் திருப்பி அளித்துள்ளதை இங்கே நினைவுகூரலாம்.
இன்று பஞ்சாப் எழுத்தாளர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதுகளைத் திருப்பி அளித்துள்ளனர்.
மத்திய அரசு, கடுங்குளிரில் சாலைகளில் உருண்டு போராடிவரும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க மறுக்கிறது. பஞ்சாப் எழுத்தாளர்கள் போராட்டக்காரர்களுக்குத் தங்களின் ஆதரவைத் தெரிவிப்பதோடு, தேசிய அளவில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாகவும் சாகித்ய அகாடமியின் சார்பில் வழங்கப்பட்ட கவுரவத்தை எழுத்தாளர்கள் மத்திய அரசிடம் திருப்பி அளித்துள்ளனர்''.
இவ்வாறு மத்திய பஞ்சாப் எழுத்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT