Published : 04 Dec 2020 09:15 AM
Last Updated : 04 Dec 2020 09:15 AM
நாட்டை வழிநடத்தும் தலைவராவதில் ராகுல் காந்திக்கு இன்னும் பக்குவம் போதாது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குறித்து சரத்பவார் விமர்சித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, “எ பிராமிஸ்ட் லாண்ட்” என்ற தலைப்பில் சுயசரிதை நூல் எழுதியுள்ளார். அதில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி குறித்து ஒபாமா குறிப்பிடுகையில், “பதற்றமானவர், பக்குவப்படாமல் இருக்கிறார். மாணவரைப் போல் பாடங்களை நன்றாகப் படித்து, ஆசிரியரை ஈர்க்கும் திறமை படைத்தவராக இருக்கலாம். ஆனால், குறிப்பிட்ட பாடத்தில் ஆழ்ந்த அறிவு பெறக்கூடிய விருப்பமோ அல்லது தகுதியோ இல்லாதவராக இருக்கிறார்” எனத் தெரிவித்திருந்தார்.
இப்போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ராகுல் காந்தி குறித்து கரது்துத் தெரிவித்துள்ளார்.
மராத்தியில் வெளிவரும் லோக்மாத் நாளேட்டுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேர்காணல் அளித்தார். அந்த நாளேட்டின் உரிமையாளரும் முன்னாள் எம்.பி.யுமான விஜய் தார்டா நேர்காணல் கண்டார்.
அப்போது, சரத்பவாரிடம் , “ ராகுல் காந்தியை நாட்டை வழிநடத்தும் தலைவராக இந்த தேசம் ஏற்றுக்கொள்ளுமா? எனக் கேட்டார்.
அதற்கு சரத் பவார் பதில் அளிக்கையில் “ ராகுல் காந்தி இந்த தேசத்தை வழிநடத்தும் தலைவராக மாறுவதில் இன்னும் பக்குவம் போதாமையாகத்தான் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
ராகுல் காந்தி குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கூறிய கருத்துக்கள் குறித்து கேட்டபோது, அதற்கு சரத் பவார் பதில் அளிக்கையில் “ நாம் அனைவரின் கருத்தையும் ஏற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நம்முடைய நாட்டின் தலைமையைப் பற்றி நான் என்ன வேண்டுமானாலும் கூற முடியும்.
ஆனால், மற்றொரு நாட்டின் தலைமையைப் பற்றி பேசமாட்டேன். ஒவ்வொருவரும் அவர்களுக்கான எல்லையை, அளவுகோலை கடைபிடிக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை ஒபமா எல்லை மீறி பேசிவிட்டார்” எனத் தெரிவித்தார்
காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் குறித்தும் கட்சியில் ராகுல் காந்தி தடையாக மாறுகிறாரா என்று கேட்கப்பட்டதற்கு, சரத் பவார் பதில் அளிக்கையில் “ எந்த ஒரு கட்சியின் தலைவரும் கட்சியின் அமைப்புக்குள் என்ன விதமான தன்மையை ஏற்றுக்கொண்டிருக்கிறார்களோ அதைப்பொருத்தே எதிர்காலம் அமையும்.
எனக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் அவரின் குடும்பத்துக்கும் இடையே வேறுபாடு எழுந்தது.ஆனால், இன்று காங்கிரஸ் தொண்டர்கள் காந்தி-நேரு குடும்பத்தாரிடம் பாசத்துடன், பற்றுடன் இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT