Published : 04 Dec 2020 03:15 AM
Last Updated : 04 Dec 2020 03:15 AM
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக முடிவுஎட்டப்படவில்லை. இதனால், தங்கள் போராட்டம் இன்னும் தீவிரமாக தொடரும் என விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன.
மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவிவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி புறநகரில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளை அவர்கள் ஆக்கிரமித்துள்ளதால் ஒட்டுமொத்த டெல்லியும் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறை ஒழிந்துவிடும் என்பதே விவசாயிகளின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது. இந்தக் குற்றச்சாட்டை மத்திய அரசு பல முறை மறுத்தபோதிலும், விவசாயிகள் அதனை ஏற்பதாக இல்லை. இந்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே, இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு ஏற்கெனவே 2 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், இதில் சுமூக தீர்வு ஏற்படவில்லை.
இந்நிலையில், டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் மத்தியவேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 35 பெரிய விவசாய சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். பிற்பகல் 1 மணிக்கு தொடங்கிய இப்பேச்சுவார்த்தை இரவு 7.30 மணி வரை நீடித்தது.
இதில், விவசாயிகளுக்கு அரசு வழங்கி வரும் குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறையில் எந்த மாற்றமும் இருக்காது என அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உறுதியளித்தார். மேலும், இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளிக்கவும் அரசு தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
ஆனால், அரசின் இந்த வாக்குறுதியை நம்ப முடியாது என தெரிவித்த விவசாயிகள், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வதே இதற்கு சிறந்த தீர்வாக இருக்க முடியும் என கூறினர். அமைச்சர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பல முறை விளக்கமளித்தும், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர விவசாயிகள் சம்மதம் தெரிவிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, நாளை(டிச.5) மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாய அமைப்புகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருக்கிறது.
இதுகுறித்து விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூறுகையில், “புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற அரசு தயாராக இல்லை. ஆனால், இந்த சட்டங்களை வாபஸ் பெறும் வரை நாங்கள் போராட்டத்தைக் கைவிட மாட்டோம். அதுமட்டுமின்றி, இனி எங்கள் போராட்டம் மிகவும் தீவிரமடையும்” என்றார்.
உணவு வாங்க மறுப்பு
இதனிடையே, இந்தப் பேச்சுவார்த்தையின்போது விவசாய சங்கப் பிரிதிநிதிகளுக்கு அரசுசார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. ஆனால், அதனை வாங்க மறுத்த விவசாயிகள், தாங்கள் கொண்டு வந்திருந்த உணவையே உட்கொண்டனர். மத்திய அரசு மீது விவசாயிகளுக்கு இருக்கும் அதிருப்தியை இது பிரதிபலிக்கும் விதமாக இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT