Published : 03 Dec 2020 06:23 PM
Last Updated : 03 Dec 2020 06:23 PM
தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் கோழைகள் என்று இன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கர்நாடகாவில் ஆளும் பாஜக அமைச்சர் பேசியதற்குக் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தைச் சேர்ந்த பொன்னம்பேட்டில் மூங்கில் விவசாயிகளின் கூட்டத்திற்கு இன்று (வியாழக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கர்நாடக வேளாண் அமைச்சர் பி.சி.பாட்டீல் கூறியதாவது:
"தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் கோழைகள். தம்முடைய மனைவி மற்றும் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள முடியாத ஒரு கோழை மட்டுமே தற்கொலையில் ஈடுபட முடியும். நாம் தண்ணீரில் தவறி விழுந்துவிட்டால் உடனடியாக நீந்தி அப்போதைய துன்பத்தை வெல்ல வேண்டும். விவசாய வணிகம் மிகவும் லாபகரமானது. ஆனால் சில கோழைகள் அதை உணராமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
இதற்கு உதாரணமாக தங்க வளையல்களை அணிந்த ஒரு பெண்ணைப் பற்றி இங்கு நான் சொல்ல விரும்புகிறேன். அப்பெண்ணின் கைகளில் இவ்வளவு தங்க வளையல்கள் எப்படி வந்தன என விசாரித்தபோது, அப்பெண்மணி என்ன சொன்னார் என்று உங்களுக்குத் தெரியுமா? இந்த பூமித்தாய் என் 35 வருட உழைப்பிற்காக எனக்குக் கொடுத்தது என்று கூறினார். விவசாயத்தையே ஒரு பெண்மணி முழுமையாக நம்பி சாதிக்கவும் முடியும்போது, மற்ற விவசாயிகளால் ஏன் அதைச் செய்ய முடிவதில்லை''.
இவ்வாறு கர்நாடக வேளாண் அமைச்சர் தெரிவித்தார்.
விவசாயிகள் தற்கொலை குறித்து கர்நாடக அமைச்சரின் இப்பேச்சுக்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கண்டனம்
இதுதவிர கர்நாடக அமைச்சரின் பேச்சுக்கு மாநில காங்கிரஸ் கட்சியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் வி.எஸ்.உக்ரப்பா பிடிஐயிடம் கூறுகையில், ''தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் கோழைகள் என்று கூறியதன் மூலம் வேளாண் அமைச்சர் விவசாய சமூகத்தையே அவமானப்படுத்தியுள்ளார். விவசாயிகள் தற்கொலை குறித்த அவரது பேச்சுக்கு எங்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். விவசாயிகளை அவமதித்ததற்காக அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
சில விவசாயிகள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதைக் கண்டறிய அமைச்சர் இப்பிரச்சினையின் ஆழம்வரை சென்றிருக்க வேண்டும். எந்தவொரு விவசாயியும் வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டுமென்று விரும்புவதில்லை. வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற பல காரணங்கள் உள்ளன. அவை இன்னும் புரிந்து கொள்ளப்படவில்லை மற்றும் தீர்க்கப்படவுமில்லை. பிரச்சினையின் தீவிரத்தைப் புரிந்துகொள்வதற்குப் பதிலாக, அமைச்சர் இவ்வாறு பொறுப்பில்லாமல் பேசுகிறார்'' என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT