Published : 03 Dec 2020 04:31 PM
Last Updated : 03 Dec 2020 04:31 PM
நாட்டின் சிறந்த 10 போலீஸ் நிலையங்களில் தமிழகத்தின் சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு 2-ம் இடம் தரப்பட்டுள்ளது. மணிப்பூரில் உள்ள தவுபால் மாவட்டத்தில் உள்ள நாக்போக் சேக்மாய் காவல்நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்ற 55-வது டிஜிபி, ஐஜிபி போலீஸ் மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியானது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
கடந்த 2015-ம் ஆண்டு குஜராத்தின் கட்ச் நகரில் நடந்த போலீஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பிறப்பித்த உத்தரவுகளுக்கு ஏற்ப ஒவ்வொரு நாட்டில் சிறப்பாக செயல்படும் போலீஸ் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி இந்த ஆண்டு 16 ஆயிரத்து 671 போலீஸ் நிலையங்கள் ஆய்வு செய்யப்பட்டு 10 சிறந்த போலீஸ் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்த சிறந்த போலீஸ் நிலையங்களைத் தேர்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன, அதன் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
கரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் சவாலான சூழல்களில் சிறப்பாகச் செயல்பட்ட போலீஸ் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் பரவலால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நாட்டின் எல்லையோரப் பகுதிகளில் செயல்படும் போலீஸ் நிலையம் உள்பட அனைத்து காவல்நிலையங்களின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்வது சவாலானப் பணியாக அமைந்தது.
நாட்டில் ஆயிரக்கணக்கான போலீஸ் நிலையங்களின் செயல்பாடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதில் போலீஸ்நிலையங்கள் வகைப்படுத்தப்பட்டன. மொத்தம் 16,671 போலீஸ் நிலையங்களை ஆய்வு செய்து இதில் 10 சிறந்த போலீஸ் நிலையங்களை வகைப்படுத்துவது என்பது கடினமான பணியாகும். இதில் பல போலீஸ் நிலையங்கள் சிறிய நகரங்களிலும் கிராமங்களிலும் அமைந்திருந்தன.
போலீஸ் நிலையங்கள் குறித்த புள்ளிவிவரங்கள், நேரடி கண்காணிப்பு, பொது மக்களின் கருத்து ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டு இந்த 10 போலீஸ் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டன.
குறிப்பாக சொத்துக்கள் தொடர்பான குற்றங்களை கையாளுதல், பெண்களுக்கு எதிரான குற்றம், நலிவடைந்தோருக்கு எதிரான குற்றங்கள், ஆட்கள் காணாமல் போதல், அடையாளம் தெரியாத உடல்கள், ஒருவரை கண்டுபிடிக்கமுடியாமல் போதல் போன்ற குற்றங்களை எவ்வாறு கையாண்டார்கள் என்ற அடிப்படையில் தரவரிசை வழங்கப்பட்டது.
19 வகையான அளவுகோள் அடிப்படையில் மக்களுக்கு எவ்வாறு போலீஸ் நிலையங்கள் சேவை செய்கின்றன, குற்றங்களைக் கண்டுபிடிக்க எவ்வாறு தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து போலீஸ் நிலையங்கள் தரம் பிரிக்கப்பட்டன.
ஒட்டுமொத்தத்தில் 80 மதிப்பெண்களும், 20 சதவீதம் போலீஸ் நிலையத்தின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள், மக்களிடையே எவ்வாறு பழகுகிறார்கள், அணுகுகிறார்கள் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது.
அந்த வகையில் முதலிடத்தில் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள தவுபால் மாவட்டத்தில் உள்ள நாக்போக்சேக்மாய் காவல்நிலையத்துக்கு முதலிடம் வழங்கப்பட்டது.
2-வது இடம் தமிழகத்தில் சேலம் நகரில் உள்ள சூலமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வழங்கப்பட்டது.
3-வது இடம் அருணாச்சலப்பிரதேசத்தில் சாங்லாங்கில் உள்ள கார்சாங் பிஎஸ் காவல் நிலையத்து வழங்கப்பட்டது.
4-வது இடம் சத்தீஸ்கரில் உள்ள பையா தானாவில் ஜில்மிலி காவல் நிலையம், 5-வது இடத்தில் கோவாவில் உள்ள சாங்கும் காவல் நிலையம், 6-வது இடத்தில் அந்தமான் நிகோபர் தீவில் உள்ல காலிகாட் போலீஸ் நிலையத்துக்கு வழங்கப்பட்டது.
7-வது இடம் சிக்கிமில் கிழக்கு மாவட்டத்தில் உள்ள பாக்யாங் காவல் நிலையம், 8-வது இடம் உத்தரப்பிரதேசத்தில் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள காந்த் காவல் நிலையம், 9-வது இடம் தாத்ராநகர் ஹாவேலியில் உள்ள கான்வேல் காவல்நிலையம், 10-வது இடம் தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள ஜம்மி குண்டா காவல்நிலையத்துக்கு வழங்கப்பட்டது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT