Published : 03 Oct 2015 01:38 PM
Last Updated : 03 Oct 2015 01:38 PM
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக, சமாஜ்வாதி தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, பாட்னாவின் தெக்ரி பகுதியை சேர்ந்த குமார் வெங்கடேஷ்வர் என்பவர் அம் மாநில காவல்துறை கண்காணிப்பாளரான விகாஸ் வைபவிட அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிஹார் மாநில சமாஜ்வாதி கட்சியின் தலைவர் ராமச்சந்திர சிங் யாதவ் மீது ஐபிசி 406, 420 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 136-ன்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இம் மாநிலத்தின் செயலாளர் மற்றும் பத்திரிகை தொடர்பாளரான ராஜேஷ் சிங்கின் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் குமார் வெங்கடேஷ்வர் கூறுகையில், 'கடந்த மே மாதம் என்னை அணுகிய ராஜேஷ், தம் கட்சியில் பிரபலங்களை வேட்பாளராக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். இதற்காக, ரூபாய் 20 லட்சம் கட்சியின் நிதியாக அளிக்க கூறிய்வரிடம் நான் 10 லட்சம் மட்டும் இருப்பதாகக் கூறினேன். இதில், 8 லட்சங்களை ராமச்சந்திர சிங்கின் வங்கிக் கணக்கிலும், 1.75 லட்சத்தை ராஜேஷிடம் ரொக்கமாகவும் அளித்தும் எனக்கு போட்டியிட வாய்ப்பளிக்காமல் ஏமாற்றி விட்டனர்' எனத் தெரிவித்தார்.
பிஹாரின் கைமூரில் உள்ள பபுவா தொகுதியில் கடந்த 2005-ல் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏவானவர் ராமச்சந்திர சிங். பிறகு சமாஜ்வாதிக்கு தாவியவரின் மனைவியான நூத்தன் சந்திர யாதவை இந்தமுறை பபுவாவில் தம் கட்சி சார்பில் போட்டியிட வைத்துள்ளார்.
தம் மீதான புகாரை மறுக்கும் ராமச்சந்திர சிங், கட்சியின் நிதிக்காக பணம் தருவதாக வலிய வந்து கூறிய குமார், தமது வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தி விட்டு, எங்கள் மீது புகார் அளித்திருப்பதாகவும், இது நித்திஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் சமாஜ்வாதிக்கு எதிராக செய்யும் சதி என்றும் தெரிவித்துள்ளார். எனினும், சமாஜ்வாதி கட்சி தலைவர்கள் மீதான வழக்கால் அவர்களுக்கு சிக்கல் ஏற்படும் எனக் கருதப்படுகிறது.
வரும் அக்டோபர் 12 முதல் ஐந்து கட்டமாக பிஹாரில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் உபியை ஆளும் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சி, தம் தலைமையில் தனியாக ஒரு கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT