Published : 02 Dec 2020 11:36 AM
Last Updated : 02 Dec 2020 11:36 AM
மத்திய பாதுகாப்புப் படையான சிஆர்பிஎஃப்-பின் (சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் ஃபோர்ஸ்) காக்கி சீருடையை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவமான அதற்கு தனி அடையாளம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சிஆர்பிஎஃப் தலைமை இயக்குநர் ஜெனரலான ஏ.பி.மஹேஷ்வரி இணையதளம் வழியாக தன் படை அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர், உலகின் மிகப்பெரிய துணை ராணுவப்படையான சிஆர்பிஎஃப் சீருடையை மாற்றுவது குறித்து கருத்துகள் கேட்டு சுற்றறிக்கை வெளியிட்டார்.
அந்தச் சுற்றறிக்கையையில் தலைமை இயக்குநர் ஜெனரல் மஹேஷ்வரி குறிப்பிடுகையில், ’தற்போது நம் படையினர் அணியும் காக்கி சீருடையானது மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல்துறையினர் அணிவதைப் போன்று மிகவும் சாதாரணமாக உள்ளது.
இதே காக்கி சீருடையை தபால்துறையினர் முதல் எல்பிஜி சமையல் எரிவாயு விநியோகம் செய்பவர் வரையும் கூட அணிகின்றனர். இந்தவகையில், சிஆர்பிஎப் படையினர் காக்கி சீருடையும் சாதாரணமாக இல்லாமல், அதற்கு தனி அடையாளம் அமைக்கும் வகையில் இருக்க வேண்டும்.
எனவே, நமது படையினருக்கு காக்கி அல்லாத புதிய சீருடை தனி அடையாளம் பெறும் வகையில் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.’ எனத் தெரிவித்துள்ளார்.
எனவே, ராணுவம், விமானப்படை மற்றும் கப்பற்படைக்கு இணையாக சிஆர்பிஎஃப் படையினருக்கும் தனி அடையாளம் பெறும் வகையில் புதிய சீருடை விரைல் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT