Published : 01 Dec 2020 08:31 PM
Last Updated : 01 Dec 2020 08:31 PM
வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிவரும் விவசாயிகளின் கோரிக்கையைப் பரிசீலிக்கும் வகையில், புதிய குழுவை அமைக்கும் மத்திய அரசின் ஆலோசனையை விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் நிராகரித்துவிட்டனர்.
இதனால், மத்திய அரசுக்கும், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் இழுபறியில் முடிந்தது.
இதனால் வரும் 3-ம் தேதி, 2-ம் சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளை மத்திய அரசு அழைத்துள்ளது என விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளும், விவசாய அமைப்புகளும் கடந்த இரு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டெல்லி சலோ எனும் டெல்லி நோக்கிய போராட்டத்தை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் எல்லையை முற்றுகையிட்டு 6 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் குளிர், கரோனா பரவல் எதையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
விவசாயிகளுடன் வரும் 3-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முன்பு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், சூழல் கருதி இன்று பிற்பகலில் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் சங்கத்துக்கு மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்தார்.
இதன்படி டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று பிற்பகலில் நடந்த பேச்சுவார்த்தையில் 35 விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தகத்துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஏறக்குறைய 3 மணி நேரம் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நீண்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் விவசாயிகள் கோரிக்கையைப் பரிசீலக்க ஒரு சிறப்புக் குழுவை அமைக்கிறோம் என்ற மத்திய அரசின் ஆலோசனையை முற்றிலுமாக விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் நிராகரித்தனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்தை முற்றிலுமாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், இந்தச் சட்டங்கள் வேளாண் சமூகத்துக்கு எதிரானவை என்றும், குறைந்தபட்ச ஆதரவு விலையைக் குலைத்துவிடும் என்றும், கார்ப்பரேட்டுகளின் கருணைக்காக நாங்கள் எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும் எனக் கூறியும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் எதிர்ப்புத் தெரிவித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், மத்திய அரசுத் தரப்பில், “புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்குச் சிறந்த வாய்ப்புகளையும், வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்களையும் கொண்டுவரும்” என வலியுறுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்துக்கு பின் பாரத் கிஷான் யூனியன் தலைவர் ஜோகிந்தர் சிங் உக்ராஹன் கூறுகையில், “மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை முழுமையடையவில்லை. எங்களின் கோரிக்கையைப் பரிசீலிக்க 5 நபர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைப்பதாகக் கூறியது அதை நிராகரித்துவிட்டோம். டிசம்பர் 3-ம் தேதி மற்றொரு கூட்டத்தில் சந்திப்போம்” எனத் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை தொடங்கும் முன் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “அனைத்துச் சிக்கல்களையும் பேசித் தீர்வு காண அரசு தயாராக இருக்கிறது. விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளின் கோரிக்கையைக் கேட்டபின் தீர்வு காணப்படும்” எனத் தெரிவித்தார்.
35 விவசாயிகள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது சாத்தியமில்லாதது. சிறிய குழுக்களாக இருந்தால்தான் பேச்சுவார்த்தை நடத்த ஏதுவாக இருக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், விவசாயிகள் சங்கத்தினரோ நாங்கள் மொத்தமாகத்தான் வருவோம். தனித்தனிக் குழுவாகப் பேச்சுவார்த்தைக்கு வர முடியாது எனத் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT