Published : 01 Dec 2020 07:48 PM
Last Updated : 01 Dec 2020 07:48 PM
நாட்டில் உள்ள எந்தக் குடிமகனும் ஜம்மு காஷ்மீரில் வேளாண்மைக்காக நிலம் வாங்கலாம் என உள்துறை அமைச்சகம் கடந்த அக்டோபர் மாதம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முகமது யூசுப் தாரிகாமி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும். இந்த மனுவை விசாரித்து முடிக்கும்வரை, உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்குத் தடைவிதிக்க வேண்டும் என அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகள் பிரிவு 32-ன் கீழ் இந்த மனுவை தாரிகாமி தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
''கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஏராளமானோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் நாட்டில் உள்ள யார் வேண்டுமானாலும் ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்க அனுமதியளித்து மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதம்.
1996-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் நிலவருவாய் சட்டத்தின் வேளாண் நிலம் மேலாண்மை தொடர்பான சில பிரிவுகளை மத்திய உள்துறை அமைச்சகம் திருத்தியுள்ளது. 1970, ஜம்மு காஷ்மீர் மேம்பாட்டுச் சட்டத்தின் மண்டலத் திட்டமிடலில் நிலத்தைக் கட்டிடங்கள் கட்டப் பயன்படுத்துதல், சாலைகள், தொழிற்சாலை, வணிகம், சந்தைகள், பள்ளிகள், பொதுப் பயன்பாடு ஆகியவற்றுக்கான பிரிவுகளும் திருத்தப்பட்டுள்ளன.
விவசாயம் செய்யாதவர்களுக்கு வேளாண் நிலங்களை விற்பனை செய்யத் தடை இருக்கும்போது, விவசாயி ஒருவரிடம் இருந்து, விவசாயம் செய்யாத ஒருவருக்கு நிலத்தை விற்கவோ, பரிசாக அளிக்கவோ, பரிமாறிக்கொள்ளவோ, அடமானம் வைக்கவோ, ஒப்பந்தம் செய்யவோ அரசின் மூலம் நியமிக்கப்பட்ட அதிகாரி அனுமதியளிக்க முடியும் எனத் திருத்தப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் மூலம், மாநிலத்தின் நிலப் பயன்பாட்டில் தீவிரமான மாற்றத்தை உருவாக்கும். மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பை அழித்துவிடும். ஜம்மு காஷ்மீர் மக்களின் வேளாண் தொழிலை, வர்த்தக நோக்கிலிருந்து காக்க வேண்டும் என்ற நோக்கில் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால், இதை மத்திய உள்துறை அமைச்சகம் கருதாமல் உத்தரவு பிறப்பித்துள்ளது.
111 பக்கத்தில் ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டும் சட்டத் திருத்தங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் முக்கியமாக ஜம்மு காஷ்மீர் மேம்பாட்டுச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தில் ஜம்மு காஷ்மீரில் பிறந்தவர் மட்டுமே நிலம் வாங்க முடியும் என்பதைத் திருத்தி, இந்தியாவில் யார் வேண்டுமானாலும் ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்கலாம் எனக் கொண்டு வந்துள்ளது.
மத்திய அரசின் இந்தச் செயல் மாநிலத்தை விற்பனை செய்யும் முயற்சியாக இருக்கிறது. இதற்குத் தடைவிதிக்க வேண்டும்''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT