Published : 01 Dec 2020 02:47 PM
Last Updated : 01 Dec 2020 02:47 PM
கரோனா வைரஸ் தடுப்பூசியை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிப்பது உள்ளிட்டவை தொடர்பாக வரும் 4-ம் தேதி கூடும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 10 எம்.பி.க்களுக்குக் குறைவான கட்சித் தலைவர்களுக்குப் பேச அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் கரோனா வைரஸ் பரவல் சூழல், கரோனா வைரஸ் தடுப்பூசியை எவ்வாறு மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் 4-ம் தேதி நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்கள் , பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் காணொலி மூலம் நடக்கும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸவர்த்தன், அமைச்சர்கள் முரளிதரன், அர்ஜுன் ராம் மேக்வால், அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கவுபா உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.
குளிர்காலத்தில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால், குளிர்காலக் கூட்டத்தொடரையும், பட்ஜெட் கூட்டத்தொடரையும் சேர்த்து நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்த விவகாரம் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்தியாவில் 6 மருந்து நிறுவனங்கள் கரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. அதுகுறித்த விவரங்களை பிரதமர் மோடி எடுத்துரைப்பார் எனத் தெரிகிறது.
கரோனா வைரஸ் பரவலுக்குப் பின் மத்திய அரசு சார்பில் நடக்கும் 2-வது அனைத்துக் கூட்சிக் கூட்டமாகும். கரோனா வைரஸ் லாக்டவுன் பிறப்பிக்கும் முன்பாக இதுபோன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 10 எம்.பி.க்களுக்கும் குறைவாக இருக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் பேசுவதற்கு அனுமதியில்லை. இது தொடர்பாகக் கட்சிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
10 எம்.பி.க்களுக்கும் குறைவாக இருக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படாது என்றால், பல மாநிலக் கட்சிகளும் கருத்துகளைத் தெரிவிக்க முடியாத சூழல் ஏற்படும்.
குறிப்பாக சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிரோன்மனி அகாலிதளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி சக்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்காது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பைக் கேட்டதைத் தொடர்ந்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பினோய் விஸ்வம் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “10 எம்.பி.க்களுக்குக் குறைவாக இருக்கும் கட்சிகளுக்குப் பேசுவதற்கு அனுமதியில்லை என்ற தகவல் அறிந்தேன். சிறிய கட்சிகளுக்குப் பேச அனுமதிப்பதில் சாத்தியமில்லை என பிரதமர் அலுவலகம் நினைத்தால், என்னுடைய கருத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
கரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். பிசிஆர் பரிசோதனையின் கட்டணத்தை குறைக்க வேண்டும். பிரதான் மந்திரி கரீப்கல்யான் யோஜனா திட்டத்தை 2021 மே மாதம் வரை நீட்டிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT