Published : 01 Dec 2020 02:04 PM
Last Updated : 01 Dec 2020 02:04 PM
மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் 6-வது நாளாகப் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள், விவசாய சங்கங்கள், மத்திய அரசின் பேச்சுவார்த்தையில் பங்கேற்பது குறித்து இன்று பிற்பகலில் கூடிப் பேசி முடிவெடுக்க உள்ளனர்.
கரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு, கடும் பனி ஆகியவற்றுக்கு இடையே டெல்லியில் எல்லைப் பகுதிச் சாலையில் தொடர்ந்து 6-வது நாளாகப் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு வரும் 3-ம் தேதி வருமாறு மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்திருந்தார்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி சலோ போராட்டத்தில் பஞ்சாப், ஹரியாணா மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள், விவசாய சங்கங்கள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லியின் திக்ரி, சிங்கு எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து 6-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தெற்கு டெல்லியில் உள்ள புராரி மைதானத்துக்குச் சென்றபின்புதான் பேச்சுவார்த்தை தொடங்கும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கோரிக்கையை ஏற்க விவசாய அமைப்புகள் மறுத்துவிட்டன. நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு மட்டுமே சம்மதிப்பதாகத் தெரிவித்துள்ளனனர்.
இதற்கிடையே, மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அளித்த பேட்டியில், “கரோனா வைரஸ் பரவல், கடும்பனி ஆகியவற்றுக்கு இடையே போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் டிசம்பர் 3-ம் தேதிக்கு முன்பாகவே இன்று (டிசம்பர் 1) பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்.
டிசம்பர் 1-ம் தேதி டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 13-ம் தேதி பேச்சுவார்த்தையில் பங்கேற்ற விவசாயிகள் சங்கப் பிரிதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கலாம்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே, மத்திய அரசு விடுத்த அழைப்பை ஏற்று, இன்று பேச்சுவார்த்தையில் பங்கேற்பதா இல்லையா என்று முடிவெடுக்க விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இன்று பிற்பகலில் கூடி ஆலோசிக்கின்றனர்.
இது தொடர்பாக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பல்ஜீத் சிங்கால் மஹால் கூறுகையில், “இன்று பிற்பகலில் விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் கூடி ஆலோசிக்கிறோம். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் மத்திய அரசின் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதா, இல்லையா என்பது தெரியவரும்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT