Published : 01 Dec 2020 10:32 AM
Last Updated : 01 Dec 2020 10:32 AM

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்; மக்கள் வாக்களித்து வலிமையை காட்ட வேண்டும்: ஒவைசி வலியுறுத்தல்

ஹைதராபாத்

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் மக்கள் வாக்களித்து தங்கள் வலிமையை காட்ட வேண்டும் என ஹைதராபாத் எம்.பி.யும், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவருமான ஒவைசி அழைப்பு விடுத்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பாஜக, காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம் கட்சி ஆகியவை தீவிரமாகப் பிரச்சாரம் செய்தன/

பாஜக சார்பில் அக்கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர்.

ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் தற்போது மிகப்பெரிய கவுரவத் தேர்தலாகப் பார்க்கப்படுகிறது. பாஜக எத்தனை இடங்களில் வென்றுவிடும் என்று பார்க்கிறேன் என்று பிரதமர் மோடிக்கு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஒவைசி சவால் விடுத்தார்.

அதைத் தொடர்ந்து நடந்த பிரச்சாரத்தில் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை அரசியல் கட்சித் தலைவர்கள் பயன்படுத்துவது அதிகரித்தது. அசாசுதீன் ஒவைசியை நவீனகால முகமது அலி ஜின்னா என்று பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி. சூர்யா விமர்சித்தார்.

இந்த பரபரப்பான சூழலில் ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவையொட்டி தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி, ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஒவைசி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் வாக்களித்தனர்.

மாநகராட்சி தேர்தலில் வாக்களித்த பின்பு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஹைதராபாத் எம்.பி.யும், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவருமான ஒவைசி கூறுகையில், “ஹைதராபாத் மக்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்த தங்கள் வாக்கினை பதிவு செய்ய வேண்டும். மக்கள் தங்கள் வலிமையை காட்ட வேண்டும்” என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x