Last Updated : 30 Nov, 2020 04:45 PM

 

Published : 30 Nov 2020 04:45 PM
Last Updated : 30 Nov 2020 04:45 PM

கோவிட்-19 நிலைமை; மோடி தலைமையில் டிசம்பர் 4-ம் தேதி நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் 

பிரதமர் மோடி | கோப்புப் படம்.

புதுடெல்லி

பிரதமர் மோடி தலைமையில் டிசம்பர் 4-ம் தேதி கோவிட் -19 நோய்த்தொற்று நிலைமை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 94 லட்சத்தைக் கடந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 88.50 லட்சத்தை நெருங்குவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா தாக்கத்தைக் குறைப்பதற்காகத் தயாராகிவரும் கோவிட்-19 தடுப்பூசிகள் தயாரிப்புப் பணிகளை கடந்த சனிக்கிழமை பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலிருந்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சக உயரதிகாரிகள் பிடிஐயிடம் கூறியதாவது:

''கோவிட்-19 நோய்த்தொற்று நிலைமை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது வரும் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறும். நாடாளுமன்றத்தில் இரு அவைகளைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் கூட்டத்தை ஒருங்கிணைத்து வருகிறது. கோவிட்-19 நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டதிலிருந்து நிலைமை குறித்து விவாதிக்க அரசாங்கத்தால் அழைக்கப்பட்ட இரண்டாவது அனைத்துக் கட்சிக் கூட்டம் இதுவாகும்.

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோரும் கலந்து கொள்வார்கள்.

தேசியத் தலைநகரில் அதிகரித்து வரும் கோவிட்-19 பாதிப்புகளை அடுத்து, நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரை பட்ஜெட் அமர்வுடன் இணைப்பது குறித்து ஆலோசித்து வரும் நேரத்தில் இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது.

கரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிப்புப் பணிகளை மோடி ஆய்வு செய்த பின்னர் நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுவதால், இக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது''.

இவ்வாறு அமைச்சகத்தின் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x