Published : 30 Nov 2020 03:10 AM
Last Updated : 30 Nov 2020 03:10 AM

உயர் கல்வி படித்து பணக்கார நாடுகளுக்கு இடம்பெயர்வோரில் இந்தியர்கள் முதலிடம்

புதுடெல்லி

உயர்கல்வி, தொழில்நுட்பக் கல்வி படித்துவிட்டு பணக்கார நாடுகளுக்கு இடம் பெயர்வோர் பட்டியலில் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.

உலகில் உள்ள 32 நாடுகள் இணைந்து பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பை (ஓஇசிடி) ஏற்படுத்தியுள்ளன. இந்த ஓஇசிடி நாடுகள் பெரும்பாலும் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளாக உள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், நார்வே, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளன.

இந்த ஓஇசிடி அமைப்பிடம் இருந்து கிடைத்த தகவலின்படி உள்நாடுகளில் உயர்கல்வி, தொழில்நுட்பக் கல்வி படித்துவிட்டு ஓஇசிடி நாடுகளில் குடியேறுவோர் பட்டியலில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது. இந்த நாடுகளில் சுமார் 12 கோடி வெளிநாட்டவர்கள் உள்ளனர். இவ்வாறு படித்து விட்டு வருவோரில் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வியைப் படித்துவிட்டு வரும் நபர்களின் எண்ணிக்கை 30 முதல் 35 சதவீதமாக உள்ளது.

ஓஇசிடி நாடுகளில் சுமார் 30 லட்சம் இந்தியர்கள் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக சீனாவைச் சேர்ந்த 22.5 லட்சம் பேர் உள்ளனர். இந்த பட்டியலில் பிலிப்பைன்ஸைச் சேர்ந்தவர்கள் 3-வதுஇடத்தில் உள்ளனர். சுமார் 19 லட்சம் பிலிப்பைன்ஸ் நாட்டவர், ஓஇசிடி நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

மருத்துவம், நர்சிங், உயர்கல்வி, தொழில்நுட்ப நிபுணர்கள், கம்ப்யூட்டர் சாப்ட்வேர், ஹார்ட்வேர் நிபுணர்கள் போன்றவர்களுக்கு இந்த ஓஇசிடி நாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது.குறிப்பாக நர்ஸிங் படிப்பு படித் தவர்களுக்கு இந்த நாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து அதிகளவில் நர்சிங் படித்த ஆண்கள், பெண்கள் ஓஇசிடி நாடுகளுக்கு குடிபெயர்கின்றனர். தற்போது கரோனா வைரஸ் பரவி வருவதால் இந்த ஆண்டுநர்சிங் படித்த சுமார் 5 ஆயிரம்பேர் மட்டும் ஓஇசிடி நாடுகளுக்கு வந்துள்ளனர். கரோனா பெருந்தொற்று பிரச்சினை இல்லாவிட்டால் இந்த எண்ணிக்கை கூடியிருக்கும் என்று ஓஇசிடி அமைப்பு தெரிவிக்கிறது.

மேலும் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து அதிக அளவில் அமெரிக்காவுக்கு உயர்கல்வி படித்த வர்கள் குடிபெயர்கிறார்கள் என்றும் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவுக்கு குடிபெயர்வோர் பட்டியலில் 2-வது இடத்தில் மெக்சிகோ, 3-வது இடத்தில் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளனர் என ஓஇசிடி அமைப்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x