Published : 30 Nov 2020 03:10 AM
Last Updated : 30 Nov 2020 03:10 AM
விவசாயிகள் போராட்டத்தால் டெல்லியில் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வேண்டுகோளை ஏற்க மறுத்துள்ள விவசாய சங்கங்கள், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அதிகாரம் படைத்த அமைச்சர்கள் குழுவைநியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாக கூறி 3 புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கடந்த செப்டம்பரில் இயற்றியது. இந்த சட்டங்கள், விவசாயிகளின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனால், இந்த சட்டங்களில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள், முழுக்க முழுக்க பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், தங்கள் நலனுக்கு எதிராக இருப்பதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர். குறிப்பாக, விளைபொருட்களுக்கான ஆதார விலை நிறுத்தப்படும் என அச்சம் தெரிவித்தனர். அதை மத்திய அரசு மறுத்தது.
ஆனாலும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பஞ்சாப்,ஹரியாணா, தெலங்கானா மாநிலங்களில் விவசாயிகளின் போராட்டங்கள் தீவிரமடையத் தொடங்கின. பஞ்சாப் மாநில விவசாயிகள் தொடர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மாதங்களாக நடந்த போராட்டத்தால் மத்திய, மாநில அரசுகளுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, விவசாயிகளுடன் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், பேச்சுவார்த்தை நடத்தினார். தங்களை மத்திய அரசு அழைத்துப் பேச வேண்டும் என்ற நிபந்தனையுடன் ரயில் மறியல் போராட்டத்தை விவசாயிகள் கடந்த வாரம் கைவிட்டனர். ஆனால்,அவர்கள் கேட்டுக் கொண்டபடி, மத்திய அரசு விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த பஞ்சாப், ஹரியாணாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் டெல்லியை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். டெல்லி எல்லைக்குள் அவர்களை நுழைய விடாமல் ஹரியாணா போலீஸார் தடுத்தனர். அப்போது போலீஸாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தடையை மீறி கடந்த வெள்ளிக்கிழமை விவசாயிகள் டெல்லிக்குள் அதிரடியாக நுழைந்தனர். போலீஸாரின் தடுப்புகளை மீறிச் சென்ற விவசாயிகளை போலீஸார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். ஆனால், அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் இருந்ததால் அவர்களை கலைந்து போக செய்ய முடியவில்லை.
டெல்லி எல்லைப் பகுதியில் முகாமிட்ட அவர்கள், தாங்கள் போராட்டம் நடத்துவதற்கு ஜந்தர் மந்தர் மற்றும் ராம்லீலா மைதானத்தை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்க மறுத்த போலீஸார், புறநகர் பகுதியில் உள்ள புராரி எனுமிடத்தில் போராட்டம் நடத்துமாறு தெரிவித்தனர்.
இதற்கு சம்மதம் தெரிவிக்காத விவசாயிகள், டெல்லியின் புறநகர் பகுதிகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளை ஆக்கிரமித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 500-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களைச் சேர்ந்தஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஒட்டுமொத்த டெல்லியும் ஸ்தம்பிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பலபகுதிகளில் ஏற்பட்டுள்ள கடுமையானபோக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தால் டெல்லியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் விவசாய அமைப்புகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதில், விவசாயிகள் புராரி பகுதியில் போராட்டம் நடத்த முன்வர வேண்டும் என்றும், அப்படி செய்தால் மத்திய அரசு நிர்ணயித்த தேதிக்கு (டிச.3) முன்பாகவே விவசாய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். பொதுமக்களை சிரமத்தில் தள்ளுவதை விவசாயிகள் தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார். அமித் ஷாவின் இந்த வேண்டுகோளை விவசாய அமைப்புகள் திட்டவட்டமாக நிராகரித்துள்ளன. மேலும், பேச்சுவார்த்தை தொடர்பாக மத்திய அரசுக்கு புதியநிபந்தனைகளையும் அவை விதித்திருக்கின்றன.
இதுகுறித்து, விவசாய அமைப்புகளின் போராட்டத்துக்கு தலைமை வகிக்கும் அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விவசாயிகள் விவகாரத்துக்கும், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே, பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கோரிக்கையை நாங்கள் நிராகரிக்கிறோம். இந்த விஷயத்தில் உள்துறை அமைச்சகத்தின் தலையீடு என்பது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை மறைமுகமாக மிரட்டும் விதமாகவே இருக்கிறது. இந்த அணுகுமுறையை மத்திய அரசு முதலில் கைவிட வேண்டும்.
விவசாய அமைப்புகளுடன் மத்திய அமைச்சர்கள் சிலர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களால் இந்த விஷயத்துக்கு நேரடியாக தீர்வு காண முடியும் என நாங்கள் நம்பவில்லை.
முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின்போது, டெல்லியில் ஊழலுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்திய அன்னா ஹசாரே குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த பிரத்யேக மத்திய அமைச்சர்கள் குழு நியமிக்கப்பட்டது. அவர்களுக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டிருந்தது.
அதேபோல, எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மத்திய அமைச்சரவைக் குழு அல்லது உச்ச அதிகாரம் படைத்த அமைச்சர்கள் குழுவை உடனடியாக நியமிக்க வேண்டும். மிக முக்கியமாக, எந்த முன்நிபந்தனையும் இன்றி விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். நிபந்தனையுடன் கூடிய பேச்சுவார்த்தைக்கு நாங்கள் ஒருபோதும் உடன்பட மாட்டோம். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை டெல்லியில் இருந்து திரும்புவதில்லை என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT