Published : 07 Oct 2015 08:41 AM
Last Updated : 07 Oct 2015 08:41 AM
டெல்லியில் 20 கிலோ லிட்டர் குடிநீரை இலவசமாக அளித்து வரும் ஆம் ஆத்மி அரசு, பயனாளிகளிடம் ரூ. 500 வரை ‘சுற்றுச்சூழல் இழப்பீடு வரி’ வசூலிக்க முடிவு செய்துள்ளது.
இம்மாதம் (அக்டோபர்) முதல் வசூலிக்கப்படும் இந்த வரி, இலவச குடிநீர் மீதான மறைமுகக் கட்டணம் என புகார் கூறப்படுகிறது.
டெல்லி தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், கடந்த மே மாதம் ஓர் உத்தரவு பிறப்பித்தது. அதில் டெல்லி குடியிருப்புகள் கழிவுநீரை வெளியேற்றுவதால் அதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பை ஈடுசெய்யும் வகையில் குடியிருப்புவாசிகளிடம் டெல்லி அரசு, குடிநீர் வாரியம், மாநகராட்சிகள் உட்பட அனைத்து சிவில் அமைப்புகளும் சுற்றுச் சூழல் இழப்பீடு வரி வசூலிக்க வேண்டும் எனக் கூறியது.
இதையொட்டி முதல்வர் கேஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவை, வரி வசூலிக்கும் முடிவை எடுத்தது.
இதை தற்போது அரசு உத்தரவாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி குடிநீர் வாரியத்தின் கட்டண ரசீதில் இனி இந்த வரியும் சேர்த்து வசூலிக்கப்பட உள்ளது.
கடந்த ஜனவரியில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி இலவசக் குடிநீர் திட்டத்தை கேஜ்ரிவால் அறிவித்தார்.
இதில் 20 கிலோ லிட்டர் வரை இலவசம் எனவும் அதற்கு மேல் பயன்படுத்துவோருக்கு கட்டணம் எனவும் அறிவிக்கப்பட்டது. தற் போது இலவச குடிநீரை பெறுவோர் மீதும் சுமத்த இருக்கும் சுற்றுச்சூழல் வரி என்பது குடிநீர் மீதான மறைமுக கட்டணம் என்று பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வன்மையாகக் கண்டித்துள்ளன.
இந்த வரியானது டெல்லியில் உள்ள வீடுகளின் ஏ முதல் எச் வரை உள்ள காலனிகளுக்கு ஏற்றவாறு வசூலிக்கப்பட உள்ளது. இதன்படி, ஏ மற்றும் பி வகை காலனிகளுக்கு ரூ. 500-ம், சி மற்றும் டி வகைகளுக்கு ரூ. 200-ம், ஈ, எப், ஜி மற்றும் எச் வகை காலனிகளின் வீடுகளுக்கு ரூ. 100-ம் வசூலிக்கப்படும்.
காலனிகளை டெல்லி மாநகராட்சி ஏற்கெனவே வரையறுத் துள்ளது. இந்த வரையறை தற்போது பின்பற்றப்பட உள்ளது. டெல்லியில் கடைசியாக 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக் கெடுப்பின்படி 33.10 லட்சம் வீடுகள் உள்ளன.
தற்போது முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு புதிய கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT