Published : 29 Nov 2020 05:25 PM
Last Updated : 29 Nov 2020 05:25 PM
இன்னும் சில மாதங்களில் நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் மண்குவளைகளில் தேநீர் விற்பனை செய்யப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
வடமேற்கு ரயில்வேயின் கீழ் புதிதாக மின்மயமாக்கப்பட்ட திகாவாரா-பாண்டிகுய் பிரிவின் தொடக்க விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள திகாவாரா ரயில் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியின்போது மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது:
''இப்போதே 400 ரயில் நிலையங்களில் குல்ஹாட்ஸ் (மண்குவளைகள்) மூலம் தேநீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்னும் சில மாதங்களில் நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் இதனை நடைமுறைக்குக் கொண்டுவருவதே எங்கள் திட்டமாகும்.
இது பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை நோக்கி ரயில்வேயின் பங்களிப்பாக இருக்கும். மண் குவளைகள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தவை. அதே நேரத்தில் இது ரயில்வே பயணிகளுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒன்று ஆகும்.
மண்குவளைகள் தேவையின்பொருட்டு லட்சக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பைப் பெற முடியும்''.
இவ்வாறு பியூஷ் கோயல் தெரிவித்தார்.
கடந்த 2004-ல் லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சராகப் பணியாற்றிய காலங்களில் ரயில் நிலையங்களில் சுட்ட மண் குவளைகளால் ஆன தேநீர் கப்களில் தேநீர் விற்பனை செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT