Published : 29 Nov 2020 11:38 AM
Last Updated : 29 Nov 2020 11:38 AM
உ.பி.யில் புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள, திருமணத்திற்காக கட்டாய மதமாற்றம் செய்வதற்கு எதிரான சட்டத்தின் கீழ் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த நவம்பர் 24-ம் தேதி கட்டாய மதமாற்றத்தைத் தடுக்கும் வகையில் 'லவ் ஜிகாத்'துக்கு எதிரான அவசரச் சட்டத்துக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதனைத் தொடர்ந்து 'லவ் ஜிகாத்' தொடர்பான குற்றங்களுக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க முன்மொழியப்பட்டது. உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் சனிக்கிழமை சட்டவிரோதமாக மத மாற்றுவதற்கான தடைச்சட்டம் 2020க்கு ஒப்புதல் அளித்தார்.
ஆளுநர் ஒப்புதல் அளிக்கப்பட்ட நாளிலேயே, இத்தடைச் சட்டத்தின் கீழ் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காவல் துறையினர் இன்று கூறியதாவது:
''கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் முதல் வழக்கு பரேலி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. ஒரு பெண்ணைப் பலவந்தமாக மதம் மாற்றி திருமணம் செய்வதற்கான மோசடியில் சிலர் ஈடுபட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து தியோரானியா காவல் நிலையத்தில் சனிக்கிழமை மாலை பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து புகார் அளித்தனர். மதம் மாற்றுவதற்காக இளம்பெண்ணைக் கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கிய நபர் தற்போது தலைமறைவாகியுள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது''.
இவ்வாறு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT