Published : 29 Nov 2020 03:12 AM
Last Updated : 29 Nov 2020 03:12 AM

‘நிவர்’ புயலின் சூறாவளி காற்றால் ஆந்திர கடற்கரையில் தங்க வேட்டை

காக்கிநாடா

நிவர் புயலின் சூறாவளி காற்றுக்கு ஆந்திர மாநிலம் காக்கிநாடா கடற்கரையில் சில தங்க மணிகள் இருந்ததை மீனவர்கள் கண்டெடுத்தனர். இதனால் சிறிது நேரத்திலேயே நூற்றுக்கணக்கானோர் அந்த இடத்தில் தங்க வேட்டை நடத்தினர்.

நிவர் புயலின் தாக்கம் ஆந்திர மாநிலத்தில் உள்ள கடலோர மாவட்டங்களிலும் மற்றும் ராயலசீமா மாவட்டங்களிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலை காக்கிநாடா அருகே உள்ள உப்படா தொரட பேட்டா ஆகிய பகுதிகளில் உள்ள கடற்கரையில் ஒரு கிராம் மற்றும் 2 கிராம் மதிப்புள்ள தங்க மணிகள் மண்ணில் புதைந்திருந்ததை சில மீனவர்கள் கண்டெடுத்தனர். இந்த செய்தி அதன் சுற்றுப்புற கிராமங்களில் வேகமாகப் பரவியது.

இந்த செய்தியால் நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என மீன் வலைகள், சீப்புகள் போன்றவற்றால் தங்கத்தை தேட ஆரம்பித்தனர். கடும் சூறாவளி காற்றிலும், கன மழையிலும் குடை பிடித்தவாறு பலர் தங்க வேட்டை நடத்தினர். இதில் 4 பேருக்கு மட்டுமே சிறிதளவு தங்கம் கிடைத்ததாக தெரிய வந்துள்ளது.

கடந்த மாதம் இதே பகுதியில் ஏற்பட்ட புயல் காரணமாக அப்பகுதிகளில் புனித நீராடிய சிலர், நேர்த்திக் கடனாக சிறிய அளவு தங்கத்தை கடலில் அர்ப்பணம் செய்ததாலும், சிலர் கடலில் குளிக்கும் போது தவறி விழுந்ததாலும் இந்த தங்க நகைகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்றும், அந்த நகைகள் தற்போது புயலின் காரணமாக கடல் சீற்றத்தால் மீண்டும் கரைக்கு ஒதுங்கி இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து வருவாய்த் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். கடற்கரையில் தங்க மணிகள் கிடைத்ததால் கடந்த 3 நாட்களாக அப்பகுதி மக்கள் இன்னமும் தங்க வேட்டை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x