Published : 28 Nov 2020 03:02 PM
Last Updated : 28 Nov 2020 03:02 PM
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் கெடிலா நிறுவனத்துக்கு இன்று நேரில் சென்ற பிரதமர் மோடி, கரோனா தடுப்பு மருந்துப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
கரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணயில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், அகமதாபாத்தைச் சேர்ந்த ஜைடஸ் பயோடெக் பார்க், புனேயில் உள்ள சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் ஆகியவை ஈடுபட்டுள்ளன.
இந்த மூன்று நிறுவனங்களும் 2,வது 3-வது கிளினிக்கல் பரிசோதனையில் இருப்பதால், மருந்து தயாரிப்பு பணிகளை இன்று பிரதமர் மோடி 3 நிறுவனங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு நடத்தத் திட்டமிட்டிருந்தார்.
டெல்லியிலிருந்து இன்று காலை புறப்பட்ட பிரதமர் மோடி காலை 9.00 மணி அளவில் அகமதாபாத் சென்றடைந்தார். அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள சாங்கோதர் தொழிற்பூங்காவில் இருக்கும் ஜைடல் கெடிலா நிறுவனத்துக்கு பிரதமர் மோடி சென்றார்.
ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, நிர்வாகிகள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருடன் கரோனா தடுப்பு மருந்து தயாரி்க்கும் பணி, பரிசோதனை நிலவரம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
பிபிஇ ஆடை அணிந்து, முகக்கவசம் அணிந்து நிறுவனத்துக்குள் சென்ற பிரதமர் மோடி, கரோனோ தடுப்பு மருந்துப் பணிகளை நேரில் ஆய்வுசெய்தார். அப்போது பிரதமர் மோடியிடம் கரோனா தடுப்பு பணிகள், பரிசோதனையின் கட்டம் ஆகியவற்றை ஆராய்ச்சியாளர்கள் விளக்கினர். அவர்களிடம் பிரதமர் மோடியும் பல்வேறு சந்தேதகங்களைக் கேட்டு விளக்கம் பெற்றார் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
2021-ம் ஆண்டு மார்ச் மாதம் கெடிலா நிறுவனத்தின் சார்பில் கரோனா தடுப்பு மருந்து மக்களின் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது. ஏறக்குறைய ஒரு மணிநேரம் கெடிலா நிறுவனத்தில் இருந்த பிரதமர் மோடி காலை 11.30 மணிக்கு அங்கிருந்து ஹைதராபாத்துக்குப் புறப்பட்டார்.
அதன்பின் பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் கெடிலா பயோடெக் பார்க் நிறுவனத்துக்கு சென்றேன். அங்கு கரோனா வைரஸுக்கு எதிராக உள்நாட்டிலேயே டிஏன்ஏ அடிப்படையாக வைத்து தயாரிக்கப்படும் தடுப்பு மருந்து குறித்த விவரங்களைக் கேட்டறிந்தேன்.
இந்த பணிக்கு பின்புலத்தில் இருக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு என்னுடைய பாராட்டுகள். இந்த மருந்து தயாரிக்கும் குழுவின் பயணத்துக்கு அரசு தேவையான உதவிகளை அளித்து துணையாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஜைடஸ் கெடிலா நிறுவனம் கடந்த கரோனா தடுப்பு மருந்தின் கிளினிக்கல் பரிசோதனையின் முதல்கட்டத்தை முடித்து, 2-வது கிளினிக்கல் பரிசோதனையை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT