Published : 28 Nov 2020 10:43 AM
Last Updated : 28 Nov 2020 10:43 AM
வாடகைக் கார் நிறுவனங்களான ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் தங்களுடன் இணைந்து பணியாற்றும் ஓட்டுநர்களுக்கு கட்டணத்தில் 80 சதவீதத்தை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேசமயம், வாடகைக் கார் நிறுவனங்கள் மிகவும் பரபரப்பான நேரத்தில் அடிப்படைக் கட்டணத்தில் இருந்து 1.5 மடங்கு அதிகமாக வசூலித்துக்கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
வாடகை கார் நிறுவனங்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயித்து வருவதால், அதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து எழுப்பி வந்த கோரிக்கையை ஏற்று இந்த விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மோட்டார் வாகன நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று வெளியி்ட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
ஓலா, உபர் போன்ற வாடகைக் கார் நிறுவனங்கள் பரபரப்பான நேரத்தில் தங்கள் அடிப்படைக் கட்டணத்தில் இருந்து 1.5 மடங்கு கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம்.
அதேசமயம், வாடகைக் காருக்கு குறைவான தேவை இருக்கும் காலகட்டத்தில், நேரத்தில் அடிப்படைக் கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் குறைவாகவும் கட்டணத்தை நிர்ணயித்துக்கொள்ளவும் அனுமதியளிக்கப்படுகிறது.
சந்தையில் நிலவும் தேவை மற்றும் அளிப்புக்கு ஏற்பவும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மாற்றி அமைக்கும் கொள்கையை மையப்படுத்தியும் இந்த கட்டண உயர்வு இருக்க வேண்டும் என்பது உறுதி செய்யப்படுகிறது.
வாடகைக் கார் நிறுவனத்தோடு இணைந்து பணியாற்றும் கார் வைத்திருக்கும் ஓட்டுநர்களுக்கு கட்டணத்தில் 80 சதவீதத்தை வாடகைக் கார் நிறுவனங்கள் வழங்கிட வேண்டும்.
சில மாநிலங்களில் வாடகைக் காருக்கான கட்டணத்தை மநில அரசுகள் முடிவு செய்வதில்லை. அதுபோன்ற மாநிலங்களில் அடிப்படைக்கட்டணம் ரூ.25 முதல் ரூ.30 வரை நிர்ணயிக்கலாம்.
சக பயணிகளுடன் கட்டணத்தை பகிர்ந்து கொள்ளும்(ஷேர் டாக்ஸி) முறை இனி பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். அவ்வாறு ஷேர் டாக்ஸியில் முன்பதிவு செய்த பெண்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்தால், கட்டணத்திலிருந்து 10 சதவீதத்தை வசூலிக்க ஓட்டுநர்களுக்கு உரிமை உண்டு.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT