Published : 28 Nov 2020 09:10 AM
Last Updated : 28 Nov 2020 09:10 AM
மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளை வீழ்த்த இடதுசாரிக் கட்சிளுடன் கூட்டணி அமைப்பது அவசியம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. ஆட்சியைக் கைப்பற்ற பாஜகவும் திட்டமிட்டு காய்களை நகர்்த்தி வருகிறது.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் மோசமான தோல்வியைச் சந்தித்தன. இதை உணர்ந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து செயல்பட திட்டமிட்டுள்ளன.
இந்நிலையில், மேற்கு வங்க காங்கிரஸ் நிர்வாகிகளுடன், காணொலி மூலம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, இடதுசாரி்க் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது, தொகுதிப் பங்கீடு, வெற்றி வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனையில் இடது சாரிக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திக்க ஒட்டுமொத்த காங்கிரஸ் மாநில நிர்வாகிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆலோசனைக் கூட்டம் அறிந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகையில் “ சமீபத்தில் பிஹாரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 70 இடங்களில் 19 இடங்களில் மட்டுமே வென்றது. இதை மனதில் வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதிப்பங்கீடு செய்ய வேண்டும்.
இடது சாரிக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துதான் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று ராகுல் காந்தியிடம் வலியுறுத்தினோம். ஆனால் தொகுதிப்பங்கீடு குறித்து ஏதும் பேசவில்லை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ், பாஜக கட்சிகளை தோற்கடிக்க இடதுசாரிகளுடன் கூட்டணி வைப்பதே சிறந்தது ” என வலியுறுத்தியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மற்றொரு தலைவர் கூறுகையில் “ கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 92 இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. அதனால், அந்த எண்ணிக்கைக்கு குறைவான தொகுதிகளில் போட்டியிடக்கூடாது. காங்கிரஸ் கட்சி வலுவாக இருக்கும் தொகுதிகளை விட்டுக்கொடுக்கக் கூடாது என ராகுல் காந்தியிடம் தெரிவித்தோம்” எனத் தெரிவித்தார்.
மேற்கு வங்க காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ராகுல் காந்தி, " தலைவர் சோனியா காந்தியிடம், அனைத்து கருத்துக்களையும் தெரிவித்துவிடுகிறேன். இறுதி முடிவை சோனியா காந்தி நன்கு ஆலோசித்து சிறந்த முடிவை எடுப்பார்" என்று உறுதியளித்துள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், இடதுசாரி கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தன. இதில் 294 தொகுதகிளில் 76 இடங்களை மட்டுமே காங்கிரஸ், இடதுசாரிக் கூட்டணி வென்றது. ஆனால் தேர்தல் முடிந்த சில மாதங்களில் இடதுசாரிக் கட்சிகள் கூட்டணியை முறித்துக்கொண்டனர்.
மக்களவைத் தேர்தலில் இரு கட்சிகளுக்கு இடையே கருத்தொற்றுமை ஏதும் ஏற்படவில்லை. இதனால் தனித்துப் போட்டியிட்ட இரு கட்சிகளில் காங்கிரஸ் 2 இடங்களில் வென்றது, 25 ஆண்டுகளுக்குமே மேலாக ஆட்சியில் இருந்த மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மோசமான தோல்வியைச் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT