Published : 28 Nov 2020 03:16 AM
Last Updated : 28 Nov 2020 03:16 AM
ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி இன்று ஹைதராபாத் வருகிறார்.
ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜக, காங்கிரஸ், டிஆர்எஸ், தெலுங்கு தேசம் கட்சிகள் களம் இறங்கியுள்ளன. ஒரு கட்சியை மற்றொரு கட்சியினர் தீவிரமாக விமர்சித்து வருகின்றனர். அவ்வப்போது, தனிநபர் தாக்குதலிலும் கட்சி பிரமுகர்கள் ஈடுபட்டு வருகின்றனர். டிசம்பர் 1-ம் தேதி மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தற்போது பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
குறிப்பாக ஹைதராபாத்தில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. இதனால் கட்சியின் முக்கியத் தலைவர்கள் நேரடியாக இங்கு பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நேற்று மாலை ஹைதராபாத் நகரில் பிரச்சாரம் செய்தார். ஏற்கனவே ஹைதராபாத் பிரச்சாரத்துக்காக மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் பிரச்சாரம் செய்துவிட்டு சென்றனர். முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிசும் பிரச்சாரம் செய்தார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று ஹைதராபாத் வருகிறார். ஹைதராபாத்தில் கரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பாரத் பையோடெக் நிறுவனத்தில் மோடி ஆய்வு மேற்கொள்கிறார்.
இன்று மதியம் 1 மணிக்கு இவர் ஹைதராபாத் வந்து, மீண்டும் 3 மணிக்கு டெல்லி திரும்புகிறார். ஹைதராபாத் வரும் மோடி, தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபடுவார் என்று பாஜக வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஹைதராபாத் வர உள்ளார். இவர் செகந்திராபாத் நாடாளுமன்ற தொகுதியில் பிரச்சாரம் செய்ய உள்ளார். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் ஹைதராபாத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT