Published : 28 Nov 2020 03:16 AM
Last Updated : 28 Nov 2020 03:16 AM

தனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு 007 எண் வாங்கிய அகமதாபாத் ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்

ஆஷிக் படேல்

அகமதாபாத்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் ஆஷிக் படேல் (28).இவர் ரூ.39.5 லட்சத்தில் டொயோட்டா பார்ச்சூனர் காரை வாங்கியுள்ளார். இதற்கு அகமதாபாத் மண்டல போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் (ஆர்டிஓ) பதிவு செய்து காருக்கான எண் பெற வேண்டும். ஆர்டிஓ அலுவலகத்தில் ‘பேன்சி நம்பர்’கள் ஏலம் விடுவது வழக்கம். அதன்படி, ஏலத்தில் 007 என்ற எண்ணை பெற ஆஷிக் விரும்பினார்.

ஆர்டிஓ அலுவலகத்தில் பேன்சி நம்பருக்கான ஏலம் ஆன்லைனில் நடைபெற்றது. அதில் ஆஷிக் பங்கேற்றார். ஜேம்ஸ் பாண்ட் ரசிகரான ஆஷிக், ரூ.34 லட்சத்துக்கு 007 என்ற எண்ணை ஏலத்தில் எடுத்தார். அவருக்கு ‘ஜிஜே01டபிள்யூஏ007’ என் பதிவெண்ணை ஆர்டிஓ அலுவலகம் கடந்த 23-ம் தேதி நள்ளிரவு வழங்கியது.

இதுகுறித்து ஆஷிக் படேல் கூறும்போது, ‘‘முதல் முறையாக நான் கார் வாங்கியிருக்கிறேன். அதற்கு 007 என்ற எண்ணை பெற்றுள்ளேன். என்னைப் பொறுத்த வரையில் பணம் ஒரு விஷயமே இல்லை. இது நம்பிக்கையைப் பொறுத்தது. இந்த எண் எனக்கு ராசியானது’’ என்கிறார்.

கடந்த 23-ம் தேதி 007 என்ற எண்ணுக்கான குறைந்தபட்ச ஏலத்தொகை ரூ.25 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த எண்ணைப் பெறுவதற்கு ஆஷிக்கும் இன்னொருவரும் ஆன்லைனில் பிடிவாதமாக இருந்தனர். இதனால் நேரம் சென்று கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் ரூ.25 லட்சம் வரை ஏலத் தொகை சென்றுவிட்டது. கடைசியில் நள்ளிரவு 11.53 மணிக்கு ரூ.34 லட்சத்துக்கு ஆஷிக் கேட்டார். ஏல நேரம் முடிவடையும் தருணத்தில் இருந்ததால், அவருக்கே 007 எண் ஒதுக்கப்பட்டது.

அகமதாபாத் ஆர்டிஓ அலுவலக வரலாற்றில் ரூ.34 லட்சத்துக்கு ஒரு எண் ஏலம் எடுக்கப்பட்டது இதுவே முதல் முறை. இதில் 001 என்ற எண் ரூ.5.56 லட்சம், 0369 ரூ.1.40 லட்சத்துக்கும் ஏலம் எடுக்கப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x