Published : 16 Oct 2015 03:49 PM
Last Updated : 16 Oct 2015 03:49 PM
லண்டன் முதல் கோலாலம்பூர் வரை, பிறகு மாஸ்கோ, பாரிஸ் என்று பிரதமர் நரேந்திர மோடி மிகப்பெரிய அயல்நாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவிருக்கிறார்.
பிஹார் தேர்தல்கள் முடிந்தவுடன் அவர் இப்பயணங்களில் கவனம் செலுத்தவிருக்கிறார்.
ஏற்கெனவே 27 நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள மோடி, 30 நாட்களில் மேலும் 60,000 கிமீ தூரம் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
தற்போது அயல்நாட்டுப் பயணங்கள் தீவிரமாக திட்டமிடப்பட்டு வருகின்றன. அடுத்த வாரத்தில், மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா மற்றும் வெளியுறவு செயலர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் இந்திய-ரஷ்ய அரசாங்கங்களுக்கு இடையிலான கூட்டத்தில் கலந்து கொள்ள மாஸ்கோ செல்கின்றனர்.
இவர்கள் இந்தியாவின் ராணுவக் கொள்முதல்கள், சிவில் அணுசக்தி திட்டங்கள், விண்வெளி மற்றும் அறிவியல் திட்டங்களை இவர்கள் விவாதிப்பதோடு மோடியின் ரஷ்ய பயண தேதிகளையும் முடிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் மாத தொடக்கத்தில் பிரதமர் மோடி ரஷ்யா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாஸ்கோ மற்றும் குஜராத் மாநிலத்துடன் வர்த்தக உறவுகள் கொண்டுள்ள அஸ்ட்ரகானுக்கும் பிரதமர் செல்ல விருப்பம் தெரிவித்ததாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிஹார் தேர்தல் முடிவுகள் நவம்பர் மாதம் 8-ம் தேதி வெளியாகிறது, நவம்பர் 11 தீபாவளிப் பண்டிகை, இதன் பிறகு பிரிட்டனுக்கு 3 நாள் பயணமாக பிரதமர் செல்கிறார். லண்டன் வெம்பிலி மைதானத்தில் 70,000 என்.ஆர்.ஐ.க்களை சந்திக்க ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது.
இந்தப் பயணத்தில் பிரிட்டன் பிரதமர் கேமரூன், பிரதமர் மோடியுடன் அதிக நேரம் செலவிடுகிறார் என்று பிரிட்டன் தரப்பினர் கூறுகின்றனர். பிரிட்டனிலிருந்து துருக்கி சென்று அங்கு அந்தாலயாவில் நவம்பர் 15-16 தேதிகளில் ஜி-20 கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
ஜி-20 நாடுகள் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய சிலநாட்களிலேயே ஆசியன் மாநாட்டுக்கு கோலாலம்பூர் செல்கிறார். 2-ம் முறையாக சிங்கப்பூர் செல்லும் திட்டமும் உள்ளது.
இவ்வாறாக 30 நாட்கள் பயணத்திட்டத்தில் சுமார் 60,000 கிமீ பயணம் செய்கிறார் பிரதமர் மோடி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT