Published : 27 Nov 2020 04:44 PM
Last Updated : 27 Nov 2020 04:44 PM
விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட 6 மாநில விவசாயிகள் டெல்லி சலோ போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு எதிராகக் காவல்துறை சார்பில் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன.
ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லி நோக்கி வருவதைத் தடுக்கப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
'டெல்லி சலோ' போராட்டம் நேற்று (நவ.26) தொடங்கிய நிலையில், பஞ்சாப் விவசாயிகள் டிராக்டர் வாகனங்களில் வந்து திரளாகக் கலந்துகொண்டனர்.
ஹரியாணாவின் ஷாம்பு எல்லைப் பகுதிக்கு வந்தபோது புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முழக்கமிட்டனர். போலீஸ் தடுப்புகளை காகர் ஆற்றில் வீசினர். அப்போது, விவசாயிகளின் குழுவைக் கலைக்கவும், டெல்லி செல்வதைத் தடுக்கவும் போலீஸார் தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தினர். கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். விவசாயிகள் மீது தடியடிப் பிரயோகமும் நடத்தப்பட்டது.
தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்தது. சோனிப்பேட் பகுதியில் குழுமி இருந்த விவசாயிகள் மீது தண்ணீர் பீரங்கிகள் மூலம் நீர் பாய்ச்சப்பட்டது.
எனினும் எத்தனை நாட்கள் ஆனாலும் டெல்லிக்கு செல்வதில் உறுதியாக உள்ளனர். பல நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், சமையல் பாத்திரங்களை டிராக்டர்களில் ஏற்றிக்கொண்டு வந்துள்ளனர்.
டிராக்டர்களின் வடிவமைப்பைச் சிறிது மாற்றி, ரேஷன் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள், தண்ணீர், கம்பளி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு வந்திருந்தனர். சாலையோரம் சமையல் செய்து சாப்பிடுகின்றனர்.
இந்நிலையில், விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. விவசாயிகள் டெல்லி புராரி பகுதியில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படுவார்கள் என டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் சட்டம் ஒழுங்கை பராமரித்து, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் எல்லையில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் புறப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT