Published : 27 Nov 2020 10:03 AM
Last Updated : 27 Nov 2020 10:03 AM
விவசாயிகளின் உரிமைகளை பாஜக நசுக்க முயல்வதாகவும் ஒரே தேசம், ஒரே தலைவர் என்ற கொள்கையில் பாஜக ஆர்வமாக உள்ளதாகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாடியுள்ளார். டெல்லி சலோ போராட்டத்துக்கு முழு ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு சமீபத்தில் இயற்றிய புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து தேசியத் தலைநகரை இணைக்கும் ஐந்து நெடுஞ்சாலைகள் வழியாக 'டெல்லி சலோ' பேரணியை விவசாயிகள் நேற்று (நவ.26) தொடங்கி நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே சண்டிகர்- டெல்லி நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்காக ஹரியாணா, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு நேற்று டெல்லி நோக்கிச் சென்றனர். அம்பாலாவில் திரண்ட விவசாயிகளை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது தடுப்புகளை ஆற்றில் தள்ளியும், தடி மற்றும் கற்களை வீசியும் விவசாயிகள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதையடுத்துத் தண்ணீரைப் பீச்சியடித்தும், தடியடி நடத்தியும் அவர்களை போலீஸார் அங்கிருந்து விரட்டியடித்தனர். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''ஹரியாணாவில் நடைபெற்றது துரதிர்ஷ்டவசமானது. முதல் முறையாக அனைத்து ஜனநாயக மற்றும் அடிப்படை உரிமைகளை நசுக்க முயலும் மத்திய அரசைக் கொண்டிருக்கிறோம்.
விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக இந்த அரசு சட்டம் இயற்றியுள்ளது. பாஜக ஒரே தேசம், ஒரே தலைவர், ஒரே ஆட்சியாளர் என்ற கொள்கையில்தான் ஆர்வமாக உள்ளது. இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது. சுதந்திரப் போராட்டத்தின்போது பாஜகவின் பங்கு என்ன? உங்கள் தலைவர்களில் சிலர் சுதந்திரப் போராட்டத்தின்போது துரோகமிழைத்தவர்கள்.
அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதாவில் முக்கிய உணவுப் பொருட்களான வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு நீக்கப்பட்டது. இது மக்களுக்கு எதிரான நடவடிக்கை. இதுதான் பாஜகவின் உண்மையான முகம். தேவைப்பட்டால் டெல்லி சென்று என்னுடைய ஆதரவை விவசாயிகளுக்குத் தெரிவிப்பேன்
வெளியாட்களைக் கொண்ட கட்சியான பாஜகவுக்கு வங்கத்தில் அனுமதியில்லை. குஜராத்தில் நடந்த கலவரத்தைப் போன்று மேற்கு வங்கத்தில் நடக்க என்றுமே அனுமதிக்க மாட்டேன். எங்களுக்குக் கலவரங்கள் வேண்டாம்.
இந்த தேசம் நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர், கவிஞர் நஸ்ருல் இஸ்லாம், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சுவாமி விவேகானந்தர் ஆகியோரைக் கொண்ட நிலம். எங்கள் மாநில மக்கள் அமைதியோடும் நல்லிணக்கத்தோடும் வாழ விரும்புபவர்கள். தேர்தலின்போது மட்டும் மேற்கு வங்கம் வந்து, மாநிலத்தின் அமைதியைக் குலைப்பவர்கள் எங்களுக்குத் தேவையில்லை''.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT