Last Updated : 26 Nov, 2020 03:17 AM

1  

Published : 26 Nov 2020 03:17 AM
Last Updated : 26 Nov 2020 03:17 AM

உத்தர பிரதேசம், மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல்களில் அகிலேஷ், மம்தா பானர்ஜியுடன் கூட்டணி வைக்க ஒவைஸி விருப்பம்

அசாதுதீன் ஒவைஸி

புதுடெல்லி

பிஹாரில் முஸ்லிம் வாக்குகள் பிரிந்தமையால் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மெகா கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தது. இதேபோன்ற நிலை மேற்கு வங்கம், உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல்களில் ஏற்படாமல் இருக்க அகிலேஷ் சிங் யாதவ், மம்தா பானர்ஜியுடன் கூட்டணி வைக்க அசாதுதீன் ஒவைஸி கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் முடிந்த பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் 16 தொகுதிகள் வித்தியாசத்தில் தேசிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றிருந்தது. இதன் பின்னணியில் ஐதராபாத் எம்.பி.யான ஒவைஸியின் அகில இந்திய மஜ்லீஸ்-எ-இத்தாஹாதுல் முஸ்லிமீன்(ஏஐஎம்எம்ஐஎம்) கட்சியால் பிரிந்த முஸ்லிம் வாக்குகள் காரணமாகப் பேசப்படுகிறது. இக்கட்சி அடுத்து தேர்தல் வரவிருக்கும் மேற்கு வங்கம், உத்தர பிரதேச மாநிலங்களிலும் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. இதனால், அவ்விரண்டு மாநிலங்களிலும் பிஹாரை போல் முஸ்லிம் வாக்குகள் பிரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, வாக்குகள் பிரிவதை தடுக்க ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரான ஒவைஸி, உ.பி.யில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷுடனும் மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸுடனும் கூட்டு வைக்க விரும்புகிறார். இந்த தகவலை இவ்விரண்டு மாநிலங்களின் முக்கிய முஸ்லிம் தலைவர்கள் மூலமாக அகிலேஷ், மம்தாவுக்கு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ஏஐஎம்ஐஎம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூறும்போது, ‘பாஜக.வுக்கு எதிரான முக்கியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து கடந்த காலங்களில் நாம் போட்டியிட்ட மாநிலங்களில் பலன் கிடைக்கவில்லை. பிஹாரில் தாக்கத்தை பார்த்த பின், முக்கிய முஸ்லிம் தலைவர்கள் எங்கள் சம்மதத்துடன் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான முழு ஒத்துழைப்பு எங்கள் தரப்பில் கிடைக்கும்’’ என்று தெரிவித்தனர்.

ஆந்திரா, தெலங்கானாவில் மட்டும் போட்டியிட்டு வந்த ஏஐஎம்ஐஎம் முதல் முதலாக வெளிமாநிலங்களில் 2014-ல் மகாராஷ்டிராவில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பிறகு, பிஹாரில் 2015-ல் வெற்றி கிடைக்கவில்லை. எனினும், அதன் கிஷ்ண்கன்ச் தொகுதி இடைத்தேர்தலில் ஏஐஎம்ஐஎம் வெற்றி கண்டது. உ.பி.யில் 2017 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அக்கட்சிக்கு தொகுதிகள் கிடைக்கவில்லை. எனினும், முஸ்லிம்கள் அதிகமுள்ள தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற்றிருந்தது.

உ.பி.யின் 403 சட்டப்பேரவை தொகுதிகளில் சுமார் 22 சதவீத முஸ்லிம் வாக்குகள் உள்ளன. இவை, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே பிரிந்துள்ளன. இவர்களுடன் ஒவைஸியின் கட்சியால் அவை மேலும் பிரிந்து ஆளும் பாஜக.வுக்கு சாதகமாகும் சூழல் உள்ளது. இதனால், சமாஜ்வாதியுடன் கூட்டணி வைக்க முடியாவிட்டால், பிஹாரை போல் மாயாவதியுடன் ஒவைஸியின் கூட்டணி தொடரும் வாய்ப்புகள் தெரிகின்றன.

மேற்கு வங்கத்தின் 295 தொகுதிகளில் 27 சதவீதம் கொண்ட முஸ்லிம்களால் 98 தொகுதிகளின் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. ஒவைஸி கட்சியின் போட்டியால் இங்கு ஆளும் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் வாக்குகள் பாஜக.வுக்கு சாதகமாகப் பிரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஒவைஸியின் விருப்பத்துக்கு மம்தாவும், அகிலேஷும் பதில் கூறாமல் மவுனம் காத்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x