Last Updated : 25 Nov, 2020 03:35 PM

 

Published : 25 Nov 2020 03:35 PM
Last Updated : 25 Nov 2020 03:35 PM

வழிகாட்டும் ஓர் ஒளிவிளக்கை எங்கள் அரசாங்கம் இழந்துவிட்டது: அகமது படேல் மறைவுக்கு உத்தவ் தாக்கரே இரங்கல்

உத்தவ் தாக்கரே, அகமது படேல் | கோப்புப் படம்.

மும்பை

வழிகாட்டும் ஓர் ஒளிவிளக்கை எங்கள் அரசாங்கம் இழந்துவிட்டது என்று காங்கிரஸின் மூத்த தலைவர் அகமது படேல் மறைவு குறித்து உத்தவ் தாக்கரே இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான அகமது படேல் (71) உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று வெளியிட்ட இரங்கல் செய்தி:

''குருகிராம் மருத்துவமனையில் அகமது படேல் இன்று அதிகாலையில் காலமானார். கோவிட் -19 தொடர்பான சிக்கல்களால் அவதிப்பட்டு வந்த படேலின் மரணத்தால் காங்கிரஸ் கட்சி தனது சாணக்கியரை இழந்துவிட்டது, மகாவிகாஸ் அகாதி அரசாங்கம் வழிகாட்டும் ஓர் ஒளிவிளக்கை இழந்துவிட்டது.

பல ஆண்டுகளாக காங்கிரஸின் ரகசிய ராஜதந்திரியாகப் பணியாற்றி வந்தவர் அகமது படேல். மகாராஷ்டிராவில் எங்கள் மகா விகாஸ் அகாதி அரசாங்கம் அமைக்கப்பட்டபோது அவரது அனுபவம் மற்றும் வழிகாட்டுதலில் இருந்து எனக்கு நிறைய உதவிகள் கிடைத்தன.

நாங்கள் (சிவசேனா) காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைக்கக் காரணமாக இருந்த முக்கியக் காரணகர்த்தாவும் அவர்தான்''.

இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

சரத் பவார் இரங்கல்

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தனது இரங்கல் குறிப்பில், ''அகமது படேல் அரசியலில் மட்டுமல்லாமல் பல்வேறு சமூகச் சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலின் மறைவு குறித்து நான் மிகுந்த வருத்தப்படுகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

நிதின் கட்கரி ட்வீட்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில், "காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் ஜியின் மறைவுச் செய்தி கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்தேன். வெளியேறிய ஆத்மாவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். படேலை இழந்து வாடும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு பலம் கிடைக்குமாறு பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x