

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்று காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்றும், இதனால் மிக பலத்த காற்றுடன், கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், ஏற்கெனவே கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், புயலின் தற்போதைய நகர்வு குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. அடுத்த சில மணி நேரங்களில் இது அதி தீவிர புயலாக மாறும். அப்போது 155 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடிய வாய்ப்பு உள்ளது.
கடந்த 6 மணி நேரத்தில் வடக்கு மற்றும் வட மேற்கு நோக்கி 6 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இரவு 11.30 மணிக்கு கடலூருக்கு 310 கி.மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு 320 கி.மீட்டர் தொலைவிலும் இருந்தது. சென்னைக்கு 380 கி.மீட்டர் தொலைவில் நகர்ந்து வருகிறது.
இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.