Published : 24 Nov 2020 12:17 PM
Last Updated : 24 Nov 2020 12:17 PM
கரோனா தொற்று நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், டெல்லி முதல்வர் அர்விந்த கேஜ்ரிவால் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், கூட்டத்தில், மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன், நிதி ஆயோக் தலைவர் வி.கே.பால், அமைச்சரவை, சுகாதாரத் துறை செயலர்ளும் கலந்து கொண்டுள்ளனர்.
பிரதமருடன் பேசிய டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், "டெல்லியில் நவம்பர் 10-க்குப் பின்னர் கரோனா பரவல் படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. கடந்த நவம்பர் 10-ம் தேதியன்று ஒரே நாளில் 8,600 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதுவே ஒரே நாளில் பதிவான அதிகபட்ச தொற்று எண்ணிக்கையாக இருந்தது. அதன்பின்னர் குறிப்பிடத்தக்க அளவில் அன்றாட பாதிப்பு குறைந்து வருகிறது. டெல்லியில் கரோனா மூன்றாவது அலையில் பாதிப்பு அதிகமாக இருக்க காற்று மாசும் ஒரு காரணம்" எனத் தெரிவித்தார்.
டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்த அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவுகள் எரிப்பது உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசு தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என்றும் பிரதமரிடம் முதல்வர் கேஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களாக இந்தியாவில் அன்றாடம் 30,000 முதல் 47,000 வரை கரோனா தொற்று பதிவாகிறது. ஒட்டுமொத்தமாக 91 லட்சத்தைக் கடந்து பாதிப்பு சென்றுகொண்டிருக்கிறது.
இந்நிலையில், இன்றைய ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. பண்டிகை காலம் என்பதால் மக்கள் பொது இடங்களில் அதிகளவில் கூடியதன் காரணமாகவே நிறைய பேருக்கு தொற்று ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது.
டெல்லி, அசாம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட 4 மாநிலங்கள் கரோனா பாதிப்பு அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
மேலும், ஆஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி வந்த பின்னர் அதனை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT