Published : 23 Nov 2020 06:31 PM
Last Updated : 23 Nov 2020 06:31 PM
அசாம் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான தருண் கோகோய் மறைந்தார். அவருக்கு வயது 86.
குவாஹாட்டி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த தருண் கோகோய், இன்று (திங்கள்கிழமை) மாலை 5.34 மணிக்கு சிகிச்சை பலனின்றிமறைந்ததாக அம்மாநில சுகாதார அமைச்சர் ஹிமாந்த பிஸ்வ சர்மா தெரிவித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் அசாம் மாநில முன்னாள் முதல்வருமான தருண் கோகோய்க்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் அவர் வீடு திரும்பினார்.
ஆனால், சில நாட்களிலேயே மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கரோனாவுக்குப் பிந்தைய தாக்கத்தால் அவருடைய நுரையீரல் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகளிலும் பிரச்சினை ஏற்பட்டிருந்தது.
தொடர்ந்து உடல்நிலையில் பின்னடைவு நிலவியது. இதனால், கடந்த 21-ம் தேதி உயிர் காக்கும் செயற்கை சுவாசக் கருவியில் தருண் கோகோய் வைக்கப்பட்டார்.
அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் அனுமதியுடன் வைக்கப்பட்ட ரெக்கார்ட் ப்ள்யேர் மூலம் அவருக்கு இந்திரா காந்தியின் பேச்சுக்கள் ஒலிபரப்பப்பட்டன.
பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன் சிங், முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் தருண் கோகோயின் மகன் சவுரவ் கோகோயிடம் தொலைபேசியில் நலன் விசாரித்தனர்.
தொடர் சிகிச்சையில் இருந்த அவருக்கு சிகிச்சையை மீறியும் கரோனா ஏற்படுத்திச் சென்ற பாதிப்பால் அவருடைய பல்வேறு உறுப்புகளும் செயலிழந்தன. இந்நிலையில், இன்று அதிகாலையில்அவரது உடல்நிலை மோசமடைந்தது. இது குறித்து சுகாதார அமைச்சரும் ஊடகங்களில் தெரிவித்திருந்தார். வெளியூர் சென்றிருந்த முதல்வர் சர்பானந்தா சோனோவால் தனது பயணத்தை முறித்து ஊர் திரும்பினார்.
இத்தகைய சூழலில், தருண் கோகோய் இன்று மாலை 5.34 மணியளவில் மறைந்தார்.
தருண் கோகோய் மூன்று முறை அசாம் முதல்வராகத் தேர்வு செயப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி இரங்கல்:
தருண் கோகோய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் பிரதமர் மோடி. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஸ்ரீ தருண் கோகோய் அவர்கள் பிரபலமான தலைவர், மூத்த நிர்வாகி. அசாம் அரசியலிலும் தேசிய அளவிலும் தேர்ந்த அனுபவம் கொண்டவர். அவருடைய மறைவு வருத்தமளிக்கிறது. இந்த வேதனையான தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலும் ஆதரவும் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி" எனப் பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT