Published : 23 Nov 2020 06:13 PM
Last Updated : 23 Nov 2020 06:13 PM
மகாராஷ்டிராவில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், டெல்லி, ராஜஸ்தான், குஜராத், கோவா மாநில மக்கள் அங்கு செல்ல கரோனா பரிசோதனை அறிக்கை அவசியமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில அரசு பிறப்பித்த உத்தரவில், "டெல்லி, ராஜஸ்தான், குஜராத், கோவா மாநிலங்களிலிருந்து மகாராஷ்டிராவுக்கு வருபவர்கள் கட்டாயமாகக் கரோனா பரிசோதனை அறிக்கையை வைத்திருக்க வேண்டும்.
இது விமானம், ரயில் பயணிகளுக்கு பொருந்தும். விமானம், ரயில்களில் ஏறுவதற்கு முன்னதாகவே அவர்கள் கரோனா பரிசோதனை முடிவை காண்பிக்க வேண்டும்.
விமானப் பயணிகள் பயணத்துக்கு 72 மணி நேரத்துக்கு முன்னதாகவும், ரயில் பயணிகள் பயணத்துக்கு 96 மணி நேரத்துக்கு முன்னதாகவும் பரிசோதனை முடிவுகளைப் பெற்றிருக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல் அதிகமாக உள்ள மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. கடந்த சில நாட்களாக டெல்லியில் கரோனா தினமும் சராசரியாக 7000 பேருக்கு என்றளவில் பரவி வருகிறது.
இதனையொட்டி டெல்லி உள்ளிட்ட 4 மாநிலங்களிலிருந்து பயனிகளுக்கு மகாராஷ்டிரா அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதேபோல், இமாச்சலப் பிரதேச அரசு அங்குள்ள மாண்டி, குலு, சிம்லா, காங்க்ரா ஆகிய 4 மாவட்டங்களிலும் இரவு நேர முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நவம்பர், டிசம்பரில் கரோனா 2-வது அலை வீசும் என்று கூறப்பட்டுவந்த நிலையில் தற்போது பல மாநிலங்களில் குறிப்பாக வட மாநிலங்களில் கரோனா வேகமாகப் பரவி வருகிறது.
தலைநகர் டெல்லியைப் பொறுத்தவரை மூன்றாவது அலை ஏற்பட்டிருப்பதாக அம்மாநில சுகாதார அமைச்சரே பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT