Published : 23 Nov 2020 01:38 PM
Last Updated : 23 Nov 2020 01:38 PM
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளையும் பாஜகதான் இணைக்க வேண்டும் என்று மகாராஷ்டிர அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நவாப் மாலிக் கிண்டலடித்துள்ளார்.
மும்பை புறநகர்ப் பகுதியான பாந்த்ராவில் உள்ள ‘கராச்சி ஸ்வீட்ஸ்’ என்ற கடையின் பெயருக்கு சிவசேனா தலைவர் நிதின் நந்த்கோக்கர் ஆட்சேபனை தெரிவித்தார்.
‘கராச்சி’ என்ற பெயரைக் கைவிடுமாறும், கராச்சி ஸ்வீட்ஸ் பெயரை மராத்தியில் ஏதோவொன்றாக மாற்றுமாறும் கடையின் உரிமையாளரிடம் நிதின் நந்த்கோக்கர் கேட்டுக்கொண்டார். இது சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது. கடையின் உரிமையாளரை நிதின் மிரட்டுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால், இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த சிவசேனா எம்.பியும் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ராவத், “பெயர் மாற்றத்திற்கான இந்தக் கோரிக்கை கட்சியின் கோரிக்கை அல்ல. ‘கராச்சி ஸ்வீட்ஸ்’ 60 ஆண்டுகளாக இருந்து வருகிறது, இது மும்பை மற்றும் இந்தியாவில் உள்ளது” என்றார்.
இப்பிரச்சினை குறித்து பாஜக தலைவரும், மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், ''நாங்கள் அகண்ட பாரதம் (பிரிக்கப்படாத இந்தியா) மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். ஒரு நாள் பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சி இந்தியாவின் ஒரு பகுதியாக மாறும் என்று நாங்கள் நம்புகிறோம். அதற்கான நேரம் நிச்சயம் வரப்போகிறது'' என்று தெரிவித்தார்.
தேவேந்திர பட்னாவிஸ் கருத்துக்கு மகாராஷ்டிர அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நவாப் மாலிக் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து ஏஎன்ஐயிடம் மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் கூறியதாவது:
"கராச்சி இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் அந்த நேரம் வரப்போகிறது என்று தேவேந்திரஜி கூறிய விதத்தில்தான் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை இணைக்க வேண்டும் என்று நாங்கள் கூறினோம். பெர்லின் சுவரை இடிக்க முடிந்தால், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தையும் ஏன் ஒன்றாக இணைக்க முடியாது?
இந்த மூன்று நாடுகளையும் ஒன்றிணைத்து ஒரு நாட்டை உருவாக்க பாஜக விரும்பினால், அதை நாங்கள் நிச்சயமாக வரவேற்கிறோம். மேலும் பாஜக இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
மும்பை தேர்தல்
மும்பை மாநகராட்சித் தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் உள்ளன. மகாராஷ்டிர அரசின் ஒரு பகுதியாக உள்ள சிவசேனா மற்றும் காங்கிரஸுடன் நாங்களும் பங்கேற்றுள்ளோம். எனவே மும்பை மாநகராட்சி தேர்தலில் தேசியவாத காங்கிரஸும் போட்டியிடவே விரும்புகிறது. ஒவ்வொரு கட்சிக்கும் தங்கள் கட்சிக்காகப் பணியாற்ற உரிமை உண்டு. அனைத்துக் கட்சிகளும் அவ்வாறு செய்கின்றன.
நாங்கள் எங்கள் கட்சியையும் பலப்படுத்த விரும்புவதால், அரசாங்கத்தை நடத்தும் மூன்று கட்சிகளும் ஒன்றாக இந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றே விரும்புகிறோம்.
ஊரடங்கு இனி இல்லை
மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்குக்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை. மகாராஷ்டிராவின் ஆரோக்யா செயலகம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஆலோசனையை அனுப்பியுள்ளது. இது கோவிட்-19இன் இரண்டாவது அலை ஏற்படுவது குறித்து தயாராக இருக்கும்படி அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் நாங்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறோம். சில மாநிலங்களில் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. அதனால் அவை கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இது மகாராஷ்டிராவின் நிலை அல்ல. மகாராஷ்டிராவில் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்பது போன்ற எந்தவிதமான சூழ்நிலையும் இனி இல்லை''.
இவ்வாறு நவாப் மாலிக் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT