Published : 23 Nov 2020 11:33 AM
Last Updated : 23 Nov 2020 11:33 AM
சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை சமாளிக்க மக்கள் தொடர்பு உத்திகளுடன் கூடிய ஊடக தந்திரம் மட்டும் போதாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (திங்கள் கிழமை) காலை பதிவு செய்திருப்பதாவது:
"சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை சமாளிக்க மக்கள் தொடர்பு உத்திகளுடன் கூடிய ஊடக தந்திரம் மட்டும் போதாது. இந்த சாதாரண உண்மையை உணர மத்திய அரசு மறுக்கின்றது".
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இந்தியா - சீனா எல்லையில் டோக்லாம் பகுதியில் தொடரும் சீன ஆக்கிரமிப்பு இருநாட்டு உறவுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. கடந்த மே மாதம் முதலாகவே இப்பிரச்சினை நிலவி வருகிறது.
தற்போது, பூட்டான் எல்லையை ஒட்டிய பகுதியில் சீனா 2 கி.மீ தூரமளவிற்கு கிராமங்களை அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய செயற்கைக்கோள் படங்கள் டோக்லாமில் அமைக்கப்பட்டுள்ள கிராமங்களையும், அங்கே 9 கி.மீ அளவுக்கு இடப்பட்டுள்ள சாலைகளையும் தெளிவாகக் காட்டுகிறது.
பாங்க்டா எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த கிராமம் சர்ச்சைக்குரிய பகுதியாக இந்திய - சீன எல்லைப் பிரச்சினையில் உருவெடுத்துள்ளது.
இந்த சர்ச்சையை, இந்தியாவுக்கான பூட்டான் தூதர் மேஜர் ஜெனரல் வெட்ஸாப் நாம்கியல் பூட்டான் எல்லைக்கு அருகே சீன கிராமம் ஏதுமில்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
திசை திருப்பும் முயற்சியா?
காங்கிரஸ் தலைமை மீது மூத்த தலைவர்களான கபில் சிபல், குலாம் நபி ஆசாத் ஆகியோர் மிகக் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், ராகுல் காந்தியோ தனது வழக்கமான பாணியில் மத்திய அரசை விமர்சித்து ட்வீட் செய்துளார்.
காங்கிரஸ் கட்சியை உள்ளிருந்து ஸ்திரப்படுத்த மூத்த தலைவர்கள் வலியுறுத்தும் நிலையில் அதைப் பற்றி ஏதும் பேசாமல் ராகுல் காந்தி வழக்கமான பாணியில் மத்திய அரசை விமர்சித்து ட்வீட் செய்திருப்பது திசை திருப்பும் முயற்சி என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT