Published : 22 Nov 2020 06:12 PM
Last Updated : 22 Nov 2020 06:12 PM
குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து மத்திய அரசு பொய்யான அறிவிப்புகளை வழங்கிவருவதாக பிரியங்கா காந்தி குற்றச்சாட்டியுள்ளார். பல பாஜக ஆளும் மாநிலங்களின் அறிக்கைகளே இதை மறுத்துவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு சமீபத்தில் இயற்றிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
மூன்றுபுதிய வேளாண் சட்டங்களுக்கும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வரும் நவம்பர் 26 ஆம் தேதி தேசிய தலைநகரை இணைக்கும் ஐந்து நெடுஞ்சாலைகள் வழியாக 'டெல்லி சலோ' பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
புதிய வேளாண் சட்டங்கள் மூலம் தொழிலதிபர்களுக்குத்தான் மத்திய அரசு உதவுவதாக மோடி அரசை பிரியங்கா காந்தி விமர்சித்து வருகிறார். எனினும் விவசாயிகளுக்கு பயனளிப்பதற்காக வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
"பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களின் அதிகாரப்பூர்வ அறிக்கைகள், மத்திய அரசு உற்பத்தி செலவுக்கு மிகவும் கீழேதான் குறைந்தபட்ச ஆதரவு விலையை வைத்திருக்கிறது என்று கூறுகின்றன.
ஆனால் இந்த கறுப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப் படும்போது குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிப்பதாக பாஜக கூறியிருந்தது.
எவ்வாறாயினும், உத்தரபிரதேசம் தெரிவித்துள்ள இந்த அடிப்படை தகவல் மத்திய அரசைப் பற்றிய உண்மையான முகத்தை வெளிப்படுத்திவிட்டது"
இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT