Published : 22 Nov 2020 05:25 PM
Last Updated : 22 Nov 2020 05:25 PM
2024-ம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா 120 நாட்கள் நாடுமுழுவதும் பயணம் மேற்கொள்ள உள்ளார். டிசம்பர் மாதம் புறப்படும் நட்டா பாஜகவை அமைப்பு ரீதியாக வலுப்படுத்த இந்த பயணத்தை மேற்கொள்கிறார்.
இதுகுறித்து பாஜகவின் பொதுச்செயலாளர் அருண் சிங் இன்று டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:
2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் பாஜகவின் அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா 120 நாட்கள் நாடுமுழுவதும் டிசம்பரிலிருந்து பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தில் முதல்மாநிலமாக உத்தரகாண்டிற்கு நட்டா செல்கிறார்.
ஜே.பி.நட்டா தனது பயணத்தை டிசம்பர் 5-ம் தேதி தொடங்குவார் என்று எதிர்பார்க்கிறோம்.
பாஜக தலைவர் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று மாநிலத் தலைவர்கள், அமைப்பு ரீதியான நிர்வாகிகளுடன் காணொலி மூலம் உரையாடுவார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள எம்.பி. , எம்எல்ஏக்கள சந்தித்துப் பேசுவார். மாவட்டத் தலைவர்கள், மூத்த தலைவர்கள் ஆகியோருடனும் கட்சி நிலவரம் குறித்து கலந்துரையாடுவார். மேலும், பூத் அளவில் இருக்கும் பாஜக தொண்டர்களையும் சந்தித்து நட்டா உரையாடுவார்.
2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் வெல்ல முடியாமல் போனது அந்தத் தொகுதிகளில் அதிகமான கவனம் செலுத்தக் கோரியும், அடுத்த முறை வெற்றி பெறத் தேவையான உத்திகளை வகுக்கக்கோரியும் ஆலோசனை கூறுவார்.
அடுத்த ஆண்டு கேரளா, தமிழகம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கு கட்சி எவ்வாறு தயாராகியுள்ளது என்பது குறித்தும் மாநில நிர்வாகிகளுடன் ஜே.பி. நட்டா ஆலோசனை நடத்துவார்.
மிகப்பெரிய மாநிலங்களுக்குச் சென்றால் 3 நாட்கள் தங்கி பல்வேறு ஆலோசனைகளை ஜே.பி.நட்டா வழங்குவார். அவருடன் இருவர் உடன் செல்வார்கள்.
பாஜக ஆளும் மாநிலங்கள் தாங்கள் செய்துள்ள பணிகள், செய்துவரும் பணிகள் குறித்த விளக்கத்தை ஜே.பி.நட்டாவிடம் அளிப்பார்கள். குறிப்பாக மத்திய அரசின் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டு வருகின்றன, மக்களிடம் எவ்வாறு விழுப்புணர்வை ஏற்படுத்துவது குறித்தும் தெரிவிப்பார்கள்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் ஜே.பி.நட்டா சந்தித்துப் பேசுவார். மேலும், பொதுக்கூட்டங்கள், பத்திரிகையாளர் சந்திப்புகளும் 120 நாட்கள் பயணத்தில் இருக்கும்.
இவ்வாறு சிங் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT