Published : 22 Nov 2020 03:03 PM
Last Updated : 22 Nov 2020 03:03 PM

ஆயுர்வேத தினம்; ஆன்லைன் விநாடி வினா போட்டி: பங்கேற்பவர்களுக்கு மத்திய அரசுமின்–சான்றிதழ்

புதுடெல்லி

மத்திய அரசின் கல்வி அமைச்சகமானது 5-ஆவது ஆயுர்வேத தினத்தையொட்டி ஆன்லைனில் விநாடி வினா போட்டியை நடத்துகின்றது.

அகத்தியரின் பிறந்த நட்சத்திரம் சித்த மருத்துவ தினமாகக் கொண்டாடப்படுவதைப் போல தன்வந்திரியின் பிறந்த நட்சத்திரத்தை ஆயுஷ் அமைச்சகம் ஆயுர்வேத தினமாகக் கொண்டாடுகின்றது. கடந்த 13 ஆம் தேதிதான் 5-ஆவது ஆயுர்வேத தினம் நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பிரதம மந்திரி அன்றைய தினம் (13.11.2020) ஜெய்ப்பூரில் உள்ள தேசிய ஆயுர்வேத நிறுவனத்தையும் ஜாம்நகரில் உள்ள ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தையும் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.

மாணவர்களிடையே ஆயுர்வேத மருத்துவ முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசின் கல்வி அமைச்சகம் ஆயுர்வேத தினத்தை வாய்ப்பாகக் கருதி ஆன்லைன் விநாடி விநா போட்டியை அறிவித்து 13.11.2020 ஆம் தேதி முதல் நடத்தி வருகின்றது.

”காற்றைத் தூய்மைப்படுத்துவதில் தாவரங்களின் பயன்பாடு & ஆயுர்வேதம் மூலம் கோவிட்-19 தொற்றைக் கையாளுதல் “ என்ற தலைப்பிலான இந்த ஆன்லைன் விநாடி விநா போட்டியில் 5 நிமிடங்களில் 20 கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். மொத்த மதிப்பெண்கள் 20 ஆகும். தவறான விடைக்கு மதிப்பெண் கழித்துக் கொள்ளப்பட மாட்டாது. ஏற்கனவே தொகுத்து வைக்கப்பட்டுள்ள கேள்வி வங்கியில் இருந்து கேள்விகள் தன்னிச்சையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கேட்கப்படும்.

பங்கேற்கும் அனைவருக்கும் உடனடியாகக் கல்வி அமைச்சகத்தின் மின் – சான்றிதழ் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். 75 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு தகுதிச் சான்றிதழை என்சிஇஆர்டி நிறுவனம் வழங்கும். குறைந்த நேரத்தில் அதிகபட்ச சரியான விடைகளை அளித்தவர்கள் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்தப் போட்டியில் 11 வயதுக்கு மேற்பட்ட இந்தியக் குடிமக்கள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். ஆனால் ஒருவர் ஒரு முறை மட்டுமே கலந்து கொள்ள முடியும். போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் http://quiz.mygov.in என்ற இணைய முகவரிக்குச் சென்று போட்டிக்கான பக்கத்தைத் தேர்ந்தெடுத்து பெயர், முகவரி, மொபைல் எண், ஆதார் எண் மற்றும் இ-மெயில் ஆகியவற்றை உள்ளீடு செய்துவிட்டு போட்டிக்கான கேள்விகளுக்குப் பதில் அளிக்கத் தொடங்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x