Published : 21 Nov 2020 02:28 PM
Last Updated : 21 Nov 2020 02:28 PM
காஷ்மீரில் இந்திய கிராமங்கள் மற்றும் ராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியபோது நடந்த சண்டையில் இந்திய ஹவில்தார் பாட்டீல் சங்ராம் சிவாஜி வீரமரணம் அடைந்தார்.
இன்று அதிகாலை காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ முகாம்கள் மற்றும் எல்லையோர கிராமங்களை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
கடந்த வாரம் நவம்பர் 13 அன்று பல்வேறு போர் நிறுத்த மீறல்களை பாகிஸ்தான் துருப்புக்கள் மேற்கொண்டபோது ஐந்து பாதுகாப்புப் படைவீரர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த ஒரு வாரத்திற்குப் பின்னர் இம்மரணம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:
கத்துவா மாவட்டத்தின் ஹிராநகர் செக்டரின் சர்வதேச எல்லைப்பகுதியில் பாகிஸ்தானிய ராணுவம் போர்நிறுத்த மீறல்களில் ஈடுபட்டு துப்பாக்கிச்சூடு நடத்தியது. சத்பால், மன்யாரி, லாட்வால் மற்றும் கரோல் கிருஷ்ணா எல்லை புறக்காவல் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் துப்பாக்கிச் சூடு தொடங்கியது, இதனை எதிர்த்து இந்திய எல்லை பாதுகாப்பு படை வலுவான பதிலடி கொடுத்தது. சனிக்கிழமை அதிகாலை 5.25 மணி வரை எல்லை தாண்டிய மோதல்கள் தொடர்ந்தன, இங்கு இந்தியத் தரப்பில் எந்தவிதமான சேதமும் சேதமும் ஏற்படவில்லை.
ராஜோரியில் ராணுவ வீரர் உயிர்த்தியாகம்
ராஜோரி மாவட்டம் நவ்ஷெரா செக்டரின் லாம் பகுதியில் அதிகாலை 1 மணியளவில் போர்நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் எல்லையைநோக்கி முன்னிருத்தப்பட்ட படைவீரர் ஹவில்தார் பாட்டீல் சங்ராம் சிவாஜி சண்டையை எதிர்கொண்டார்.
சண்டையின்போது படுகாயமடைந்த நிலையில் சங்ராம் சிவாஜி உயிரிழந்தார். பாசறையில் முன்னிருத்தப்பட்ட இதில் மற்றொரு வீரரும் காயமடைந்து தற்போது ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனை அடுத்து பாகிஸ்தான் துப்பாக்கிகளை செயலிழக்கச்செய்யும்வகையில் இந்திய ராணுவம் திறம்பட பதிலடி கொடுத்தது. இரு தரப்பினருக்கும் இடையே எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு சிறிது நேரம் தொடர்ந்தது.
இவ்வாறு ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயர் அதிகாரிகள் இரங்கல்
இதுகுறித்து ஒயிட் நைட் கார்ப்ஸின் பொது அதிகாரி கமாண்டிங் (ஜிஓசி) தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ''உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரருக்கு நம் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த அனைத்து கேடர்களின் வீர வணக்கம். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்'' என்று தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஒருவர் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், ''மகாராஷ்டிராவின் கோலாப்பூரின் நிகாவே கிராமத்தைச் சேர்ந்த ஹவில்தார் சிவாஜி ஒரு துணிச்சலான, மிகவும் உந்துதல்மிக்க நேர்மையான சிப்பாய். அவரது உயர்ந்த தியாகம் மற்றும் கடமை மீதான பக்திக்கு தேசம் எப்போதும் அவருக்கு கடன்பட்டிருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT