Published : 21 Nov 2020 02:18 PM
Last Updated : 21 Nov 2020 02:18 PM
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.282.29 கோடிக்கு தேர்தல் நிதிப்பத்திரங்கள் விற்பனையானது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
பிஹாரில் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. முதல் கட்டம் அக்டோபர் 28-ம் தேதியும், 2-ம் கட்டம் இம்மாதம் 3-ம் தேதியும், 3-வது கட்டத் தேர்தல் 7ம் தேதியும் நடந்தது.
இந்த தேர்தலுக்கு முன்பாக பாரத ஸ்டேட் வங்கியில் விற்பனை செய்யப்பட்ட தேர்தல் நிதிப்பத்திரங்கள் குறித்து ஓய்வுபெற்ற கப்பற்படை அதிகாரி லோகேஷ் கே. பத்ரா ஆர்டிஐ மூலம் மனுத்தாக்கல் தாக்கல் செய்து பாரத ஸ்டேட் வங்கியில் விளக்கம் கேட்டிருந்தார்.
கடந்த அக்டோபர் 19 முதல்28-ம் தேதிவரை வங்கியின் கிளை வாரியாக விற்பனை செய்யப்பட்ட தேர்தல் நிதிப்பத்திரங்கள் குறித்து கேட்டிருந்தார். அதற்கு ஸ்டேட் வங்கி பதில் வழங்கியுள்ளது.
இதன்படி, ரூ.282 கோடியே 29 லட்சத்து ஆயிரம் மதிப்பிலான தேர்தல் நிதிப்பத்திரங்கள் எஸ்பிஐ வங்கியின் 9 கிளைகளில் விற்பனையாகின என்றும், இதில் அதிகபட்சமாக மும்பை கிளையில் மட்டும் ரூ.130 கோடிக்கு பத்திரங்கள் விற்பனையாகின என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.ஒரு கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள்தான் அதிகமாக விற்பனையாகின. இந்த பத்திரங்கள் மட்டும் 279 பத்திரங்கள் விற்பனையாகின. அதைத் தொடர்ந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் 32 பத்திரங்கள் விற்பனையாகின. ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான 9 பத்திரங்கள் விற்பனையாகின.
தேர்தல் நிதிப்பத்திரங்களின் சட்டப்பூர்வம் குறித்து ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு நீண்டகாலமாகவே கிடப்பில் இருந்து வருகிறது.
பிஹார் தேர்தலுக்கு முன்பாக தேர்தல் பத்திரங்கள் விற்பனை அறிவிப்பு வெளியானதும், அதைத் தடை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு மனுச் செய்தது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக தேர்தல் நிதிப்பத்திரங்கள் ஆண்டில் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் விற்பனை செய்யப்படும் . இந்த ஆண்டு கரோனா பாதிப்பு இருந்ததால், ஏப்ரல்,ஜூலை மாதங்களில் தேர்தல் நிதிப்பத்திரங்கள் விற்பனை செய்யப்படவில்லை. ஆனால் பிஹார் தேர்தலுக்கு முன்பாக அக்டோபர் மாதம் தேர்தல் நிதிப்பத்திரங்கள் விற்பனை நடந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT